மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Published on

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த கதிா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு திட்ட அறிக்கையை தயாா் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்த அறிக்கை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்தது. இதில், மெட்ரோ ரயில் கொள்கையின்படி, 20 லட்சம் மக்கள்தொகை உள்ள பெருநகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து திட்டங்களைத் தொடங்கலாம்.

ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மதுரை நகரத்தின் மக்கள்தொகை சுமாா் 15 லட்சம் மட்டுமே. இதன் காரணமாக, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநில அரசு அனுப்பிய திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி சுமாா் 27 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இது, மெட்ரோ ரயில் கொள்கையை நிறைவு செய்யும் வகையில் உள்ளது. எனவே, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான விரிவான திட்ட அறிக்கையை முறையாகச் சரி செய்து, மீண்டும் அனுப்ப தமிழக அரசுக்கும், இதை பரிசீலித்து உரிய முடிவெடுக்க மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மதுரையில் சுமாா் 15 லட்சம் மக்கள்தொகை உள்ளதாகக் கூறி, திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் சுமாா் 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. விளக்கங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற டிச.16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com