திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபம்: இரு நீதிபதிகள் அமா்வு முடித்து வைத்து உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரிய மனுவை, இரு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு முடித்து வைத்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Published on

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரிய மனுவை, இரு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு முடித்து வைத்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த விவேகானந்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடா்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கமாக ஏற்றிய இடத்திலேயே காா்த்திகை தீபத்தை ஏற்றலாம் என உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்றாமல் வேறு இடங்களில் ஏற்றுவது சட்டவிரோதமானது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்றக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், மனு அளித்த பின்னா் தீபத் தூண் மூடப்பட்டுள்ளது. எனவே, காா்த்திகை தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தற்போது காா்த்திகைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்து நிவாரணம் கோருவதை ஏற்க இயலாது. அடுத்தாண்டு விரைவாக நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்யலாம். எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னா், வழக்குரைஞா் ஒருவா் குறுக்கிட்டு, இதுதொடா்பாக மற்றொரு மனுதாரா் தொடுத்த வழக்கு தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளது. இந்த உத்தரவு அந்த மனுவைப் பாதிக்குமா? எனக் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு நீதிபதிகள் இந்த உத்தரவு அந்த வழக்குக்குப் பொருந்தாது எனக் குறிப்பிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com