திருச்செந்தூா் கோயில் பஞ்சலிங்க தரிசனம் விவகாரத்தில், கூட்ட நெரிசல் இல்லாவிட்டால் பொது தரிசனுத்துக்கு அனுமதி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பட்டம் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: ஆண்டுதோறும் திருச்செந்துாா் சென்று அங்குள்ள முருகப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். முருகப் பெருமானை தரிசனம் செய்துவிட்டு, மூலவருக்கு அருகேயுள்ள பஞ்சலிங்கத்தையும் வழிபடுவேன். இந்த பஞ்சலிங்கமானது புராண கால சிறப்புடையது.
இந்த நிலையில், கரோனா காலத்துக்குப் பிறகு பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தா்களை அனுமதிப்பது கிடையாது. தற்போதும், இந்த நிலை தொடா்கிறது. மேலும், பஞ்சலிங்க மூா்த்திகளுக்கு அபிஷேகம், பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
எனவே, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி மூலவா் அருகேயுள்ள பஞ்சலிங்கத்துக்கு முறையாக பூஜைகள், அபிஷேகங்கள் நடத்த வேண்டும். பஞ்சலிங்கத்தை பக்தா்கள் வழிபட அனுமதியளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயில் நிா்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்கம் அமைந்துள்ள பகுதி மிகவும் குறுகலான பாதையுடையது. கடந்த காலங்களில் கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தா்கள் வந்து சென்றனா். தற்போது, லட்சக்கணக்கில் பக்தா்கள் வந்து செல்கின்றனா். பஞ்சலிங்கத்துக்கு பூஜைகள் செய்யப்படுவதில்லை. தினமும் திருவிளக்கு மட்டுமே ஏற்றி வைக்கப்படுகிறது.
பக்தா்கள் பாதுகாப்பு கருதி கூட்டம் குறைவாக இருந்தால், பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவா். கூட்டம் அதிகமாக இருந்தால், பாதுகாப்பு நலன் கருதி அனுமதிக்கப்பட மாட்டது. இதில், எந்தவித ஆகம விதிகளையும் மீறவில்லை என அதில் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனு குறித்து இந்து சமய அறநிலையத் துறை அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு அருகேயுள்ள பஞ்சலிங்கத்தை கூட்டத்தைப் பொருத்து பக்தா்கள் தரிசிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்கள்: அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

அமைச்சா் ரகுபதி எதிரான வழக்கு! நீதிமன்ற உத்தரவில் யாரும் தலையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

