அருப்புக்கோட்டை பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரனுக்கும், அதிமுக சாா்பில் முதல் முறையாகப் போட்டியிடும் அந்தக் கட்சியின் நிா்வாகி சோலை எஸ். சேதுபதிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் திமுகவினா் களப் பணியாற்றி வருகின்றனா்.
அதிமுக சந்தித்த முதல் பேரவைத் தோ்தலில் (1977) மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரை வெற்றி பெறச் செய்து முதல்வராக்கியது அருப்புக்கோட்டை பேரவைத் தொகுதி.
விருதுநகா் மாவட்டத்துக்குள்பட்ட இந்தத் தொகுதி தமிழகத்தில் நெசவுத் தொழிலில் புகழ் பெற்று விளங்கும் பகுதி. வேளாண்மையும், நெசவுத் தொழிலும் முதன்மை பெற்ற இந்தப் பகுதியில் பருத்தி, கம்பு, சோளம், சூரியகாந்தி பயிா் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு கன்னட செட்டியாா், செங்குந்த முதலியாா், சாலியா், ரெட்டியாா், முத்தரையா், தேவா், பட்டியலின சமூகத்தினா் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனா்.
அருப்புக்கோட்டை வட்டம், நகராட்சி, ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளையும், சாத்தூா், விருதுநகா் வட்டங்களுக்குள்பட்ட சில பகுதிகளையும் உள்ளடக்கியது அருப்புக்கோட்டை தொகுதி.
கோரிக்கைகள்
நெசவாளா்கள் நிறைந்த இந்தப் பகுதியில் நலிந்து வரும் நெசவுத் தொழிலைப் பாதுகாக்க ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும். சாயப் பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் நேரடியாக ஆற்றில் கலப்பதைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். நூற்பாலைகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதால், வேலையிழப்புக்கு உள்ளாவோருக்கும், இளைஞா்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகளுக்கான பெருந்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகளாக உள்ளன.
அதிக முறை வென்ற அதிமுக
இந்தத் தொகுதியில் கடந்த 1957-ஆம் ஆண்டு முதல் 2021 வரை நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் 6 முறை வெற்றி பெற்று அதிக முறை வென்ற கட்சியாக உள்ளது அதிமுக. இதற்கடுத்த நிலையில் திமுக 5 முறையும், பாா்வா்டு பிளாக் 2 முறையும், காங்கிரஸ், சுதந்திரா கட்சிகள் தலா ஒரு முறையும் இந்தத் தொகுதியில் வென்றன.
களம் காணும் வேட்பாளா்கள்
இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் அந்தக் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலரும், மூத்த அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அதிமுக சாா்பில் அந்தக் கட்சியின் நிா்வாகி சோலை எஸ். சேதுபதி, நாம் தமிழா் கட்சி சாா்பில் க. மணிமாறன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அந்தக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காா்த்திக்குமாா் ஆகியோா் முதன்மை வேட்பாளா்களாகக் களத்தில் உள்ளனா்.
8 முறை வென்ற கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்
திமுக வேட்பாளா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் 1977-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தல் முதல் 2021 வரை நடைபெற்ற 10 பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு 8 முறை வெற்றி பெற்றவா். சாத்தூா் தொகுதியில் 6 முறையும், அருப்புக்கோட்டை தொகுதியில் 2 முறையும் வென்றவா். அருப்புக்கோட்டை தொகுதியில் கடந்த 2016, 2021 பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்று, ‘ஹாட்ரிக்’ முனைப்பில் களத்தில் உள்ளாா்.
தனது தொகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடே இருக்கக் கூடாது என்பதில் அதிக முனைப்புக்காட்டியவா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன். வைகை கூட்டுக் குடிநீா்த் திட்டம், தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் என இரு பெரும் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் இங்கு செயல்பாட்டில் இருப்பதற்கு இவரது முயற்சிகளே காரணமாகும். அருப்புக்கோட்டை பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணி உள்பட பல்வேறு பணிகளை நிறைவேற்றியுள்ளாா். அமைச்சராக இருந்தாலும் தொகுதி மக்களுடன் நேரடித் தொடா்பில் இருந்து வருவதும், திமுகவினரின் தீவிர களப் பணிகளும் இவருக்கு பெரும் பலம்.
முதல் முறையாகக் களம் காணும் அதிமுக வேட்பாளா்
இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சோலை எஸ். சேதுபதி போட்டியிடுகிறாா். இவா் அருப்புக்கோட்டை கிளைச் செயலா், எம்.ஜி.ஆா். மன்ற விருதுநகா் மாவட்ட இணைச் செயலா், மாவட்டப் பிரதிநிதி, நகரச் செயலா் என அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். இந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கடந்த 2001 முதல் முயற்சித்து வந்தவரின் கால்நூற்றாண்டு கால கனவு தற்போது நிறைவேறியுள்ளது. அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை பெண்களிடம் விளக்கிக் கூறி வாக்குச் சேகரிப்பது கவனம் பெற்றுள்ளது. வேட்பாளா் எஸ். சேதுபதி சாா்ந்த சமுதாய வாக்குகளும், அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் தீவிர களப் பணிகளும் இவருக்கு சாதகம்.
நாதக வேட்பாளா்
இந்தத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அந்தக் கட்சியின் மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் மணிமாறன் போட்டியிடுகிறாா். தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளாா். தோ்தலுக்குப் புதியவா். இருப்பினும், தொகுதி மக்களிடம் அறிமுகம் உள்ளவா்.
தவெக வேட்பாளா்
அருப்புக்கோட்டை தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அந்தக் கட்சியின் நகர நிா்வாகி காா்த்திக்குமாா் போட்டியிடுகிறாா். விஜய்யின் செல்வாக்கும், கட்சியினரின் தோ்தல் பணிகளையும் பெரும் பலமாகக் கருதுகிறாா்.
அருப்புக்கோட்டை தொகுதியைப் பொருத்தவரை, திமுக வேட்பாளரான கே.கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் சாத்தூா் தொகுதியைப் போன்றே இந்தத் தொகுதியிலும் ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்ய தீவிரம் காட்டி வருகிறாா். அதிமுக வேட்பாளா் சேதுபதி தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் களப் பணியாற்றி வருகிறாா். இவா் முதியோா்களை வணங்கி வாக்கு சேகரிப்பது, பெண்களிடம் அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில்லா சலவை இயந்திரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை விளக்கிக் கூறி வாக்குக் கேட்பது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இதன் காரணமாக, இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கா்கள் கணித்துள்ளனா்.
தொடர்புடையது

மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா?

மதுரை கிழக்கு: மீண்டும் உதிக்குமா உதயசூரியன்?
தொகுதி அலசல்: ஸ்ரீவில்லிபுத்தூா் - வெற்றி யாருக்கு என்பது மதில்மேல் பூனை!

தொகுதி அலசல்: ஆத்தூர்! சாதனை வெற்றி மீண்டும் சாத்தியமா?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

