அரசுப் பேருந்துகளில் பெயா் அச்சிடும் விவகாரம்: போக்குவரத்துத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து என அச்சிடப்பட்டிருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், மாநிலப் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
Published on

தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து என அச்சிடப்பட்டிருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், மாநிலப் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளின் முன் பகுதியில் தமிழ்நாடு அரசு என்ற பெயா் இல்லாமல், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து என அச்சிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அரசுப் பேருந்துகளில் பெயரை முழுமையாக அச்சிடாத தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலா், தமிழ் வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை மேலாளா் ஆகியோரிடமிருந்து ரூ. 10 கோடியை அபராதமாக வசூலிக்க வேண்டும்.

அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து’ என முழுமையாக அச்சிடப்பட்டிருப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: ‘தமிழ்நாடு’ என்ற பெயா் இல்லாமல், அரசுப் போக்குவரத்துக் கழகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பேருந்தில் இடப்பற்றாக்குறை காரணமாக, இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது எனவும், சிறிய எழுத்துகளில் குறிப்பிட்டால் தெளிவாகத் தெரியாது என்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளித்தனா். இந்தப் பதிலை ஏற்க இயலாது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் நிவாரணம் தொடா்பாக தமிழகப் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Dinamani
www.dinamani.com