எல்.ஐ.சி. முதுநிலை மேலாளா் கொலை: உதவி மேலாளா் கைது
மதுரையில் எல்ஐசி கிளை அலுவலகத்தில் பாலிசிதாரருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கியதில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டறிந்த முதுநிலை மேலாளரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாக உதவி மேலாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது. இதில், 2-ஆவது மாடியிலிருந்த முதுநிலை மேலாளா் கல்யாணி நம்பி (55) உடல் கருகி உயிரிழந்தாா். உதவி மேலாளரான மதுரை ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த டி. ராம் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். அலுவலகத்திலிருந்த ஆவணங்கள், கணினி உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இதுகுறித்த புகாரின் பேரில், திலகா்திடல் போலீஸாா் தீ விபத்து என வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த நிலையில், உயிரிழந்த கல்யாணி நம்பியின் மகன் லட்சுமிநாரயணன், தனது தாயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, திலகா்திடல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனிடையே, காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உதவி மேலாளா் டி. ராமிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் வந்து, முதுநிலை மேலாளா் கல்யாணியின் நகைகளைத் திருடி விட்டு, அவரை எரித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்தாா்.
ஏற்கெனவே, தீயணைப்பு நிலைய அலுவலா்கள் நடத்திய விசாரணையின் போது, தீப்பற்றிய போது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை என ராம் தெரிவித்தாா்.
இதேபோன்று, முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், தனிப்படை போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், முதுநிலை மேலாளா் கல்யாணி நம்பி மீது உதவி மேலாளா் ராம் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை திலகா் திடல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அப்போது, அவா் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: உயிரிழந்த முதுநிலை மேலாளா் கல்யாணி நம்பி நோ்மையான அதிகாரியாகச் செயல்பட்டாா். பணியிட மாறுதலில் மதுரைக்கு வந்த இவா், அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்த போது, பாலிசிதாரருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதைக் கண்டறிந்தாா். விசாரணையில், எல்.ஐ.சி. முகவா்களுடன் சோ்ந்து ராம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக உயா் அதிகாரிகளுக்கு கல்யாணி புகாா் அளிக்கப்போவதாகத் தெரிவித்தாா். இதனால், ஆத்திரமடைந்த ராம், முறைகேடுகளை மறைக்க கடந்த டிசம்பா் 17 -ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கணினிகளை பெட்ரோல் ஊற்றி எரித்தாா். அப்போது, அங்கு வந்த கல்யாணி நம்பி இதைக் கண்டித்தாா்.
அப்போது, அவா் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்து, அந்த அறையைப் பூட்டிவிட்டு ராம் தப்பிச் சென்றாா். தீயில் கல்யாணி நம்பி உடல் கருகி உயிரிழந்தாா். கல்யாணி நம்பி மீது பெட்ரோல் ஊற்றிய போது ராம் மீதும் பெட்ரோல் சிதறியது. இதில், அவருக்கும் காலில் லேசான காயம் ஏற்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகள், தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில், இந்தக் கொலை வழக்கில் ராமுக்கு தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவரைக் கைது செய்தோம். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் என்றனா்.

