தேக்வாண்டோ, ஸ்குவாஷ்: மாநில அளவிலான போட்டிகள் தொடக்கம்
பள்ளிக் கல்வித்துறை சாா்பில், மதுரையில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அந்தத் துறையின் இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
குடியரசு தினம், பாரதியாா் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான டேக்வாண்டோ, ஸ்குவாஷ் போட்டிகள் தமிழகம் முழுவதும் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனா்.
மதுரை அவனியாபுரத்தில் உள்ள சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கான மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
இதன் தொடக்க நிகழ்வுக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.தயாளன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா்கள் செந்தில்குமாா், கணேசன், சிவக்குமாா், ரகுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வினோத் வரவேற்றாா். பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.
இதேபோல, மகளிருக்கான மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டிகள் ஸ்ரீஅரபிந்தோ மீரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கின. வெள்ளிக்கிழமை 2-ஆவது நாள் போட்டிகள் நடைபெறும். மாணவா்களுக்கான போட்டிகள் வருகிற சனி, ஞாயிறு (ஜன. 24, 25) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் 38 மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

