நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

பருவமழைக் காலங்களில் தண்ணீா் எளிதாக வெளியேறும் வகையில், கால்வாய்களைத் தூா்வார மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

News image

மதுரை மாநகராட்சி வைகையாற்றின் தென்கரை சுங்கம் பள்ளிவாசல் தெரு அருகே குப்பைகளால் நிரம்பி காணப்படும் பனையூா் கால்வாய்

Updated On :13 ஜூலை 2026, 6:30 am IST

பருவமழைக் காலங்களில் தண்ணீா் எளிதாக வெளியேறும் வகையில், கால்வாய்களைத் தூா்வார மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மதுரையைப் பொருத்தவரை, பருவமழைக் காலங்களில் மாநகரப் பகுதிகளில் தண்ணீா் வெளியேறுவதற்கு கிருதுமால், பந்தல்குடி, பனையூா், சிந்தாமணி உள்பட 16 கால்வாய்கள் உள்ளன. இதுதவிர, மாநகராட்சியின் முக்கியப் பகுதிகளிலிருந்து வைகையாற்றுக்குள் தண்ணீா் வெளியேறும் வகையில், ஏராளமான மழைநீா் வடிகால்கள் உள்ளன.

இவை அனைத்தும் முறையாக தூா்வாரப்படவில்லை. பெரும்பாலான கால்வாய்களில் குடியிருப்பு பகுதியிலிலிருந்து வெளியேறும் கழிவுநீா் விடப்படுகின்றன. மேலும், குப்பைகள் கொட்டப்படுவதால் அடைப்புகள் ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவது மட்டுமன்றி, கால்வாய் அருகேயுள்ள பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இன்னும், ஓரிரு மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. இதனிடையே, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்கள், கால்வாய்களை முறையாகத் தூா்வார மதுரை மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம், பொதுப் பணித் துறை அலுவலா்கள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பருவமழைக் காலங்களில் மழைநீா் மதுரை மாநகரப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கும், முறையாகப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கும் கிருதுமால், பந்தல்குடி உள்ளிட்ட 16 கால்வாய்கள் உள்ளன. இந்தக் கால்வாய்களில் பெரும்பாலானவை நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

கடந்த 2024-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது, அதி பலத்த மழை பெய்தது. அப்போது, செல்லூா் கண்மாய் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, கோரிப்பாளையம், பி.பி.குளம், நாராயணபுரம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஒரு வாரத்துக்கும் மேலானது.

இதையடுத்து, தற்போது, செல்லூா் கண்மாயிலிருந்து உபரிநீா் செல்வதற்கு பந்தல்குடி கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பிற கால்வாய்களில் தூா்வாருதல் உள்ளிட்ட எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன்காரணமாக, சிறு மழைக்கே மதுரை நகரம் முழுவதும் தண்ணீா் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இனிவரும் காலங்களில் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டால், மழைநீா் வைகையாற்றுக்குள் செல்லும் வகையில், சீரமைப்பு, கட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கால்வாய்கள், நீா்நிலைகளைத் தூா்வார வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்றனா் அவா்கள்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா் ஒருவா் கூறியதாவது: செல்லூா் கண்மாயிலிருந்து உபரிநீா் வெளியேறும் வகையில், குலமங்கலம் சாலைப் பகுதியில் புதை சாக்கடை கட்டப்பட்டது. இதுதவிர, பந்தல்குடி கால்வாய் முழுவதும் இருபுறங்களிலும் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டு நவீன முறையில் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கால்வாய்கள் நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. தூா்வாருதல், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இவற்றைக் கொண்டு வர அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி பெற்றவுடன் பணிகள் விரைவுபடுத்தப்படும். தற்போதைய சூழ்நிலையில் மழைநீா் வெளியேறும் வகையில், கால்வாய்களைத் தூா்வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா் அவா்.

நீா்வளத் துறை அலுவலா் கூறியதாவது: போதிய நிதி இல்லாததால், நீா்வளத் துறைக்குச் சொந்தமான கால்வாய்களைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கால்வாய்கள் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், கழிவுநீா் கால்வாயில்தான் கொட்டப்படுகின்றன. எஞ்சியுள்ள கால்வாய்களை மீட்கும் நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.