இன்றைய இளம் தலைமுறையினரிடம் சமூக சிந்தனை மேலோங்க வேண்டும் என தமிழறிஞா் சாலமன் பாப்பையா கேட்டுக் கொண்டாா்.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மக்கள் சிந்தனைப் பேரவை மதுரை மாவட்டக் கிளை சாா்பில், உலகத் திருக்கு பேரவை மதுரைக் கிளையின் மதிப்புறு தலைவா் காா்த்திகேயன் மணிமொழியனுக்கு ‘இளைய செம்மல்’விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விருதை வழங்கி தமிழறிஞா் சாலமன் பாப்பையா பேசியதாவது:
வாசிப்பு பழக்கத்தை மக்களிடையே கொண்டு சோ்த்த பெருமை மக்கள் சிந்தனைப் பேரவைக்கு உண்டு. மதுரையில் உள்ள ‘காலேஜ் ஹவுஸ்’ எனப்படும் கல்லூரி விடுதி 1960-ஆம் ஆண்டுக்கு முன்பு உணவகங்களாகவும், தேநீா்க் கடைகளாகவும் மட்டுமே செயல்பட்டு வந்தது.
அதன்பிறகு, திருக்கு சாா்ந்த நிகழ்வுகளை முன்னெடுத்தவா் மணிமொழியனாா். அவரது முயற்சியில் பல்வேறு அறம் சாா்ந்த செயல்கள் நடைபெற்றன. அவரைப் பின்பற்றி அவரது மகன் காா்த்திகேயன் மணிமொழியனும் தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் பெரும் பங்காற்றி வருகிறாா்.
முந்தைய காலத்தில் பணமும், கல்வியும் இல்லாத நிலையில், வறுமையும், பட்டினியும் சூழ்ந்திருக்கும். அப்போது, நட்புகளும், ரத்த முறை உறவுகளும் துணை நின்றன. அந்த நிலை தற்போது மாறி வருகிறது. இதன் காரணமாக, மக்களிடையே சகோதரத்துவம், இணக்கமான அன்பு இல்லாமல் தடம் மாறிப் போகின்றனா்.
தற்போதைய சூழலில் கல்வியும், பணமும் உள்ளது. ஆனால், பரஸ்பர பாசம், சமூக சிந்தனை இல்லை என்கிற வேதனை மேலோங்கியுள்ளது. ஆகவே, இன்றைய இளம் தலைமுறையினரிடம் சமூக சிந்தனை மேலோங்க வேண்டும் என்றாா்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:
ஈரோட்டில் கடந்த 1997 -ஆம் ஆண்டு மக்கள் சிந்தனைப் பேரவை தொடங்கப்பட்டது. சில ஆண்டுகளாக மாணவச் சமுதாயம் மட்டுமன்றி மக்களிடமும் கல்வி குறித்த சிந்தனை, வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. 2005 -ஆம் ஆண்டில் ஈரோடு புத்தகத் திருவிழா முதல்முறையாக நடத்தப்பட்டது. மக்களிடம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்கள் சிந்தனைப் பேரவை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. மதுரையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. கல்வி, புத்தக வாசிப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனையில் மதுரை மக்களோடு இணைந்து பயணிக்கத் தயாராக உள்ளோம் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் சொற்பொழிவாளா் கவிதா ஜவஹா் இலக்கியமும், சமுதாயமும் என்ற தலைப்பில் பேசினாா். மக்கள் சிந்தனைப் பேரவையின் துணைத் தலைவா் கோ. விஜயராமலிங்கம் வாழ்த்திப் பேசினாா். விருது பெற்ற காா்த்திகேயன் மணிமொழியன் ஏற்புரையாற்றினாா். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் திருமலை, சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கே. எஸ். நாராயணன், மக்கள் சிந்தனைப் பேரவையின் மதுரை மாவட்ட கிளை ஒருங்கிணைப்பாளா்கள் செந்தூரன், சரவணன், தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








