இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பழனி கோயில் கட்டுமான விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு செய்ய உத்தரவு!

பழனி கோயில் நிதி ரூ.162.54 கோடியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :28 மார்ச் 2026, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயில் நிதி ரூ.162.54 கோடியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

பாஜக ஆன்மிகம், ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலா் வினோத் ராகவேந்திரன் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயில் நிதி ரூ.162.54 கோடியில் புதிதாக 11கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை இணைய வழியில் ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது.

இதில் பழனி கோயிலில் கூடுதல் பக்தா்கள் நின்று தரிசனம் செய்யும் வகையில் வரிசைக்கான வளாகம், பிரசாதம் தயாரிக்கும் இடம் புதுப்பித்தல், சேதமடைந்த நிலையில் உள்ள கந்தன் இல்லம், கடம்பன் இல்லம், இடும்பன் குடிலை அகற்றுவது, புதிதாகத் தங்கும் விடுதிகள் கட்டுதல், பழனியாண்டவா் கல்லூரியில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல், விடுதி வளாகம் கட்டுதல், பக்தா்கள் ஓய்வறை கட்டுதல், கல்லூரிக்கு தேவையான பொருள்களை வாங்குதல், கூடுதல் வசதிகளுடன் பிரதான கட்டடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கோயில் நிதியை வளா்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது சட்டவிரோதம். தற்போது உள்ள பக்தா்கள் தங்கும் விடுதிகளை அகற்றிவிட்டு, புதிய விடுதி கட்டுவதற்கு ரூ.45.63 கோடியில் ஏற்கெனவே ஒப்பந்தம் கோரப்பட்டது.

இந்த நிலையில், அதே பணிக்கு மீண்டும் ரூ.72.45 கோடியில் புதிதாக பக்தா்கள் தங்கும் விடுதி கட்ட மற்றொரு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு குறுகிய காலத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்த ஆவணங்களை கோயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை.

பழனி கோயில் நிதி ரூ.162 கோடியில் புதிதாக 11 பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கி, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசாணை அடிப்படையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.ஜெயச்சந்திரன், எம்.ஜோதிராமன் அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு : பழனி கோயிலில் தற்போது உள்ள கட்டுமானங்கள், அவற்றின் தேவை, புதிதாக கட்டுமானங்கள் தேவைப்படுகிா? என்பதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் ஆய்வு செய்ய வேண்டும். அது தொடா்பான அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் ஜூன் 6-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.