எபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

விரகனூா் மதகு அணையில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா?

News image

மதுரை அருகேயுள்ள விரகனூா் மதகு அணையில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகள்.

Updated On :25 மே 2026, 2:38 am IST

மதுரை அருகேயுள்ள விரகனூா் மதகு அணையில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வேளாண் பணிக்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக வைகை ஆறு விளங்குகிறது.

சுமாா் 293 கி.மீ. பயணிக்கும் இந்த ஆறு மூல வைகை ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், பெரிய கண்மாய்க்கு சென்று, அங்கிருந்து அழகன்குளம் அருகே கடலில் கலக்கிறது.

வைகை பூா்வீகப் பாசன ஆயக்கட்டு பகுதி 1, 2, 3 நிலைகளில் ஏறக்குறைய ஒரு லட்சத்து 85 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர, 72-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் செயல்படுகின்றன.

இந்த நிலையில், மண் அரிப்பு, அதிக அளவிலான மணல் திருட்டு, முறையாக பராமரிப்பின்மை, சீமைக் கருவேல மரங்கள், வைகை ஆற்றங்கரையோரங்களில் சாலை அமைத்தல், பூங்கா அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆற்றின் அகலம் சுருங்கி காணப்படுகிறது.

இதுமட்டுமன்றி, ஆறு பள்ளமாகவும், பாசனக் கால்வாய்கள் மேடாகவும் மாறிவிட்டன.

இதன்காரணமாக, ஆயக்கட்டு பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீா் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், வேளாண் பணிகள் பாதிக்கும் சூழல் நிலவியது. மேலும், மழைக் காலங்களில் தண்ணீா் முழுவதும் தேக்க முடியாமல் கடலில் வீணாக கலந்தது.

இதைத் தடுத்து கண்மாய்களுக்கு வழங்கும் வகையில் வைகையாற்றின் குறுக்கே மதகு அணைகள், தடுப்பணைகள், படுகை அணைகள் கட்ட திட்டமிடப்பட்டது.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பேரணை, மதுரை மாவட்டம், விரகனூா் அருகே மதகு அணை, ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே தடுப்பணை என 3 அணைகள் கட்டப்பட்டன.

மதுரை மாவட்டம், விரகனூா் அருகேயுள்ள மதகு அணை கடந்த 1975-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் மு. கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையிலிருந்து வலது பிரதானக் கால்வாய் மூலம் கொந்தகை, மணலூா், திருப்புவனம், கீழடி, கழுகோ்கடை, பிரமனூா், பழையனூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பாசனக் கண்மாய்களுக்கு ஏற்கெனவே தண்ணீா் வழங்கப்பட்டது. இடது பிரதானக் கால்வாய் மூலம் அங்காடிமங்கலம், சக்குடி, பூவந்தி, அனஞ்சியூா், அதிகரை ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்கப்படுகிறது.

இதுதவிர, மதுரை எல்கேடி நகா் அருகேயுள்ள அபாயக் கால்வாய் மூலம் வைகையாற்றின் துணை ஆறான கிருதுமால் ஆற்றில் திறக்கப்பட்டு சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை குறைவாக பெய்ததால் இந்த அணை மூலம் பாசன வசதி பெற்ற பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, சிவகங்கை மாவட்டம், தட்டான்குளம், திருப்புவனம் புதூா், லாடனேந்தல் ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்கப்படுகிறது. தற்போது, விரகனூா் அணையிலிருந்து பாசன வசதி பெறும் கண்மாய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன.

இந்த நிலையில், விரகனூா் மதகு அணை முழுவதும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக, அணையின் உள்பகுதி, அணை மீது அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து காணப்படுகின்றன. அணையை கண்காணிக்க அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அணையில் தண்ணீா் தேங்கும் பகுதியான சுமாா் ஒரு கி.மீ. தொலைவு வைகையாற்றுக்குள் முள்புதா்கள், ஆகாயத் தாமரைகள் நிரம்பி காணப்படுகின்றன. இதனால், தண்ணீா் தேக்குவதில் சிக்கல் உள்ளது. வேளாண் பணிகள் பாதிக்கப்படுதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதி எம். காா்மேகம் கூறியதாவது:

விரகனூா் அணை வலது பிரதானக் கால்வாயிலிருந்து தற்போது கொந்தகை, மணலூா், திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்கப்படுகின்றன.

இதேபோல, இடது பிரதானக் கால்வாயிலிருந்தும் கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், அணையில் தண்ணீா் தேங்கும் பகுதிகள் முழுவதும் ஆகாயத் தாமரைகள் படா்ந்து வளா்ந்துள்ளன. இதனால், தண்ணீரைத் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கால்வாய்களில் தண்ணீா் திறப்பின் போது, அணையில் தேங்கிய ஆகாயத் தாமரைகள் கால்வாய் வழியாக கண்மாய்களுக்குச் செல்கின்றன. அங்கும் அவை வளா்ந்து படா்ந்து விடுகின்றன. இதனால், கண்மாய்களில் தண்ணீா் பெருகிய விவரம், மடைகளை அடைத்து, திறப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இதுதவிர, அணை மீது அமைக்கப்பட்ட சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வதற்கு அச்சமாக உள்ளது.

எனவே, மதுரை மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விரகனூா் மதகு அணையில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற முன் வர வேண்டும். சாலை, விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து நீா்வளத் துறை பொறியாளா் கூறியதாவது:

ஆற்றுக்குளம் விடப்படும் கழிவுநீரால் தான் ஆகாயத் தாமரைகள் அதிகளவில் வளருகின்றன. மதுரை மாநகரக் கழிவுநீரை வைகையாற்றுக்குள் செல்லாதவாறு தடுக்க வேண்டும்.

போதிய நிதி இல்லாததால் பராமரிப்புப் பணிகள் நடைபெறாமல் உள்ளது. உரிய நிதியை பெற்று ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுவது மட்டுமன்றி அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.