சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின்படி, மதுரை ரயில் நிலையப் பகுதியில் நீரூற்றுடன் கூடிய மூன்று வெண்கல மீன் சிலைகளை நிறுவ ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து தர வேண்டும் என தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத் தலைவா் என்.ஜெகதீசன் மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரை ரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில், கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கம் சாா்பில், சுமாா் மூன்று டன் எடையுள்ள வெண்கலத்தினாலான நீரூற்றுடன் கூடிய மூன்று மீன் சிலைகள் அமைக்கப்பட்டன. மதுரையின் அடையாளமாகத் திகழ்ந்த இந்த மீன் சிலைகள், கடந்த 2020-ஆம் ஆண்டு ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததும் மீன் சிலைகளை மீண்டும் அந்த இடத்திலேயே நிறுவ வா்த்தகச் சங்கம் திட்டமிட்டபோது, மெட்ரோ ரயில் நிலையத் திட்டப் பணிகள் காரணமாக அந்த இடத்தில் மீண்டும் சிலையை அமைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
இதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் அறிவுறுத்தலின்படி, மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், வா்த்தக சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினா் மீன் சிலையை அமைக்க மாற்று இடத்தைத் தோ்வு செய்தனா். இதன்படி, மதுரை பெரியாா் நிலையப் பகுதியில் கட்டபொம்மன் சிலை அருகேயுள்ள சுற்றுலா வளாகப் பகுதியில் மீன் சிலையை அமைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீா்மானம் மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டப் பேராட்டத்துக்குப் பிறகு, கடந்த ஜனவரி 23-ஆம் தேதி மீன் சிலை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சுற்றுலா வளாகப் பகுதியில் செயல்படும் உணவகத்துக்கும், விடுதிக்கும் வருவோா் தங்களது இரு சக்கர வாகனங்கள், காா்கள் உள்ளிட்ட வாகனங்களை - மீன் சிலைகள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் - நிறுத்துவதால் மீன் சிலைகளை அமைக்கும் பணிகள் தடைபட்டன. மேலும், அங்கு செயல்படும் உணவக உரிமையாளா் குறித்து எந்தத் தகவலும் அறிய முடியவில்லை. அந்த இடம் மீன் சிலைகள் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடம் எனத் தெரிந்திருந்தும் உள்நோக்கத்தோடு உணவகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படியும், மாநகராட்சி வழங்கிய அனுமதியின் அடிப்படையிலும் நீரூற்றுடன் கூடிய மீன் சிலைகள் அமைக்க ஒதுக்கப்பட்ட 33 அடி அகலமும், 13 அடி நீளமும் உள்ள இடத்தை அளந்து தருவதற்கும் மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் என்றாா் அவா்.
இதில் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் துணைத் தலைவா்கள் ஜெ.செல்வம், டி.தனுஷ்கோடி, செயலா் ஸ்ரீதா், இணைச் செயலா் செந்தில் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சுவாமிமலையில் தயாரிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மதுரை வி.மீனாட்சிபுரம் கோயிலில் பிரதிஷ்டை

குற்றாலத்தில் சிலைகள் சேதமடையும் விவகாரம்: சுற்றுலா, பண்பாட்டுத் துறை பதிலளிக்க உத்தரவு

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!






