சிலைக்கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதற்கு இந்து அமைப்பினர், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பழனிக் கோயில் உற்சவர் சிலை தயாரிப்பில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிலைக்கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சிலைக்கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவில் உள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். இதற்கு பழனியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்து முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் புதன்கிழமை கூறியது: ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பொறுப்பேற்ற பிறகு சிலைக்கடத்தல் தொடர்பாக பல்வேறு குற்றங்களை கண்டறிந்து அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். குற்றத்தில் ஈடுபட்ட பல அதிகாரிகளையும் கைது செய்துள்ளார்.இந்த வழக்கில் மேலும் பல முக்கிய நபர்கள் கைது நடவடிக்கைக்கு ஆளாகவுள்ளனர். எனவே தான் தமிழக அரசு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம். மேலும், ஆர்ப்பாட்டமும் நடத்துவோம் என்றார்.
பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கராஜ் கூறியது:
இந்த வழக்கில் பல்வேறு அரசியல் தலையீடுகளுக்கும் இடையே ஐ.ஜி., பொன் மாணிக்கவேலின் தீவிர முயற்சியால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் இருந்து கோப்புகள் சிபிஐ-க்கு சென்றால் வழக்குகள் நீர்த்துப் போகும். இதை பாஜக கடுமையாக எதிர்க்கும். பொன் மாணிக்கவேலின் பதவி காலத்தை நீட்டித்து இந்த வழக்கில் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க தமிழக அரசு உதவவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









