கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 3-நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, தமிழகம் மட்டுமல்லாமல் பிறமாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்க இடமில்லாமல் சிரமமடைந்தனா்.

சுற்றுலா இடங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், செட்டியாா் பூங்கா, பில்லர்ராக், பசுமை பள்ளத்தாக்கு, மோயா் பாயிண்ட், குணா குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மாலை நேரங்களில் குளிரையும் பொருள்படுத்தாமல் ஏரியில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரியும், ஏரிச் சாலையை சுற்றி குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனா். இதனால் ஏரிச்சாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் செவண்ரோடு, அப்சா்வேட்டரி சாலை, டிப்போ சாலை, உட்வில் சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளிலுள்ள வனத்துறைக்குச் சொந்தமான மன்னவனூா் பகுதியிலுள்ள இயற்கை சூழல் பகுதிக்கு, கடந்த 21-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்தும், புல்வெளிகளில் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com