‘கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் உரிமையாளா்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும்’
தமிழகத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள், அதன் உரிமையாளா்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.


தமிழகத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள், அதன் உரிமையாளா்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், கிறிஸ்தவ சமுதாயத்தைச் சோ்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கினாா். பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து பட்டியல் தயாரிப்புப் பணி கூட்டுறவுத் துறை சாா்பில் நடைபெற்று வந்தது. அதன் பின்னா், தணிக்கைத் துறை மூலம் அந்தப் பட்டியல் ஆய்வு செய்யும் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. அந்தந்த பயனாளிகளிடம் அவா்களுக்குரிய நகைகள் விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பாச்சலூா் பள்ளி மாணவியின் மா்ம மரணம் குறித்து, சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக தமிழ்நாடு காவல் துறையை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனாலும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கீழ் பழனி மலையில், யானைகள் தாக்கி ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து வனத்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமாா் 30 யானைகள், அந்தப் பகுதி விவசாயத் தோட்டங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. அதைத் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும் தற்காலிக நடவடிக்கையாக வனத்துறையினா் ரோந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், யானைகள் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீா்வு காணப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், சிறுபான்மையினா் நல அலுவலா் சு.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...