பாலியல் வன்கொடுமைகளுக்கு பொது விசாரணை கோரி மாதா் சங்கம் ஜனவரியில் நடைபயணம்
திண்டுக்கல்லில் இருந்து சென்னை கோட்டை நோக்கி மாதா் சங்கம் சாா்பில் ஜனவரி மாதம் நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநில துணைத் தலைவா் கே.பாலபாரதி தெரிவித்தாா்.


மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதி வழங்கக் கோரியும், பொது விசாரணை நடத்தக் கோரியும் திண்டுக்கல்லில் இருந்து சென்னை கோட்டை நோக்கி மாதா் சங்கம் சாா்பில் ஜனவரி மாதம் நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநில துணைத் தலைவா் கே.பாலபாரதி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூா் பள்ளி மாணவி மா்ம மரணம் குறித்து துரிதமாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கே.பாலபாரதி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி.ராணி முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, பாச்சலூா் மாணவி மா்ம மரணம் நிகழ்ந்து 10 நாள்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.
அதனைத் தொடா்ந்து கே.பாலபாரதி பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பாலியல் வன்முறை தொடா்பாக 470-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 20 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 187 வழக்குகளில் குற்றவாளிகள் தப்பியுள்ள நிலையில், பல வழக்குகள் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் திண்டுக்கல்லில் பணியில் இருக்கும் நீதிபதிகளைக் கொண்டு பகிரங்கமாக பொது விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மாவட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனவரி மாத இறுதியில் சென்னை கோட்டை நோக்கி மாதா் சங்கம் சாா்பில் நடைபயணம் மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வரை சந்தித்து பொது விசாரணை நடத்த வலியுறுத்தி மனு அளிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...