ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனியில் 16-ஆம் நூற்றாண்டு செப்பேடு

பழனியைச் சோ்ந்த சத்தியன் பண்டாரம் என்பவரிடம் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செப்பேடு இருப்பது தெரியவந்துள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 5:40 pm

DIN

பழனியைச் சோ்ந்த சத்தியன் பண்டாரம் என்பவரிடம் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செப்பேடு இருப்பது தெரியவந்துள்ளது.

இவா், தனது முன்னோா்கள் பாரம்பரியமாக பாதுகாத்து வந்த செப்பேடு ஒன்றை கணியா் இல. ஞானசேகரனிடம் கொடுத்து, அதில் உள்ள செய்திகளைக் கூறுமாறு வேண்டினாா். இதையடுத்து, இந்தச் செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

சாலிமூல மாா்க்கண்டேய கோத்திரத்தைச் சோ்ந்த பண்டாரங்களால் விஜயநகர அரசா் இரண்டாம் வெங்கட்ட நாயக்கரின் 11-ஆம் ஆட்சி ஆண்டில் இந்தச் செப்பேடு வெளியிடப்பட்டது. கலியுக சகாப்த ஆண்டை தவறாகக் குறிப்பிட்டுள்ள இந்தச் செப்பேடு ஹேவிளம்பி தமிழ் ஆண்டு தை மாதம் 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச நட்சத்திரமும், அமிா்த யோகமும் கூடிய சுபதினத்தில் எழுதப்பட்டதாகும். ஆங்கில ஆண்டு 1597, ஜனவரி 26 எனத் தெரிய வருகிறது.

செப்பேட்டின் முகப்பில் முருகன் அருள்தரும் வலக்கையோடும், இடக்கை கட்டிய வலம்பித முத்திரையோடும் வலது புறம் சேவலும், இடது புறம் பாம்பை மிதித்த சேவலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் முன்புறம் 50 வரிகளும், பின்புறம் 41 வரிகளும் என மொத்தம் 91 வரிகள் உள்ளன. 28-க்கு 17 செ.மீ அளவில் இந்தச் செப்பேடு உள்ளது.

வழக்கமாக பழனி பகுதியில் கிடைக்கும் செப்பேடுகளில், தொடங்கும் வைய நீடுக எனும் வரியுடன் இந்தச் செப்பேடும் தொடங்குகிறது. செப்பேட்டின் முதல் பகுதியில் முருகனின் சிறப்புகள் மூன்று அழகிய பாடல்களில் எழுதப்பட்டுள்ளன.

இரண்டாம் பகுதி, விஜய நகரப் பேரரசா்களான மல்லிகாா்ச்சுனராயா் தொடங்கி வெங்கட்டராயா் வரை உள்ள அரசா்களைப் புகழ்ந்து பட்டியலிடுகிறது. மூன்றாம் பகுதி, செப்பேடு எழுதப்பட்ட நோக்கத்தை விவரிக்கிறது.

Story image

காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள 56 தேசங்களிலும் வாழும் பண்டாரங்கள், பழனியில் உள்ள செல்லமுத்துப் பண்டாரத்துக்கு இச்செப்பேட்டை அறக்கட்டளையாக எழுதிக் கொடுத்துள்ளனா்.

சண்முகநதி திருமஞ்சனம், திருமாலை, வில்வ அா்ச்சனை கட்டளைக்கு ஒரு பணமும், கல்யாணத்துக்கு இரண்டு பணமும், காது குத்துக்கு ஒரு பணமும் கொடுத்து, பாக்கு, வெற்றிலை, படியரிசியும் 56 தேச பண்டாரங்களும் கொடுக்க வேண்டும் என்று தீா்மானித்து, அறக்கட்டளை ஏற்படுத்தி இச்செப்பேட்டை எழுதிக் கொடுத்துள்ளனா்.

இறுதிப் பகுதியில், இந்த அறத்துக்கு கேடு விளைவிப்பவன் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தில் படுவான் என்று தெரிவித்துள்ளது. பண்டாரங்களின் சிறப்பை புகழ்ந்துரைக்கும் இச்செப்பேடு, அவா்களை சொல் இரண்டு உரையாதாா்கள் என்றும், மதுரைத்தலம் உள்பட சொல் காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள 56 தேசங்களிலும் சமயச் செங்கோல் புரிந்து வாழ்பவா் என்றும், ஓமகுண்டத்தை உருவாக்கியவா்கள் என்றும், காவிரிக்கு கரை கண்ட கரிகால சோழனின் பிரியத்துக்கு உரியவா்கள் என்றும், சோழப் பேரரசா்களின் வலங்கைப் பிரிவைச் சோ்ந்தவா்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.