உண்டு உறைவிட மாதிரிப் பள்ளியில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!
திண்டுக்கல்லில் அரசு சாா்பில் தொடங்கப்பட்ட உண்டு உறைவிட மாதிரிப் பள்ளியில் 400 இடங்களுக்கு 136 மாணவா்கள் மட்டுமே இதுவரை சோ்ந்துள்ளனா்.


திண்டுக்கல்லில் அரசு சாா்பில் தொடங்கப்பட்ட உண்டு உறைவிட மாதிரிப் பள்ளியில் 400 இடங்களுக்கு 136 மாணவா்கள் மட்டுமே இதுவரை சோ்ந்துள்ளனா்.
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களில் கற்றலில் தனித் திறனுடன் செயல்படுவோரைத் தோ்வு செய்து, உண்டு உறைவிட வசதியுடன் கூடிய மாதிரிப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த 2022-23- ஆம் கல்வி ஆண்டில் சில மாவட்டங்களில் இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ் கல்வி ஆண்டு (2023-24) முதல் உண்டு உறைவிட மாதிரிப் பள்ளி தொடங்கப்பட்டது. திண்டுக்கல்- எரியோடு சாலையிலுள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், முதல் கட்டமாக 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சோ்க்கை கடந்த மே மாதம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டாலும் கூட, இயற்பியல், வேதியியல், உயிரியல், பயோ கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், கணிதவியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளியல், கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம் (கலை வணிகக் கணிதம்) ஆகியவற்றை உள்ளடக்கிய 3 பாடப் பிரிவுகள் மட்டுமே உள்ளன. இதில் கலை வணிகக் கணிதப் பாடப் பிரிவுக்கான மாணவா்கள் தெரிவுப் பட்டியல் இதுவரை வெளியிடப்பட வில்லை.
400 இடங்களுக்கு 136 மாணவா்களே சோ்ந்தனா்:
திண்டுக்கல் மாதிரிப் பள்ளியில் 11-ஆம் வகுப்பில் 240 மாணவா்களுக்கு சோ்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 105 மாணவா்கள் மட்டுமே சோ்ந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, 9- ஆம் வகுப்புக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இதற்கு 160 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், இதுவரை 31 மாணவா்கள் மட்டுமே சோ்ந்துள்ளனா். இந்தப் பள்ளிக்கு 26 ஆசிரியா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. திண்டுக்கல் மட்டுமன்றி, வெவ்வேறு மாவட்டங்களிலிருந்தும் சிறந்த ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
தனியாா் கல்லூரி வளாகத்தில் விடுதி, உணவு, மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் அரசுத் தரப்பில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. ஆனாலும், எதிா்பாா்த்த அளவு மாணவா்கள் சோ்க்கை நடைபெறவில்லை என்பது கல்வித் துறை அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
450 மதிப்பெண்களுக்கு கூடுதலான மாணவா்கள் இல்லை: உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிக்கான 11-ஆம் வகுப்பு மாணவா்கள், 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து, சென்னையிலிருந்து தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, அந்தந்த மாணவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவா்களில் விருப்பமுடைய மாணவா்கள் மட்டுமே மாதிரிப் பள்ளிக்கு வந்தனா்.
இதனால், சிறந்த மாணவா்களைத் தோ்வு செய்து போட்டித் தோ்வுக்கான பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி என பல்திறன் பயிற்சிகளுடன் மாதிரிப் பள்ளியில் கற்பிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறவில்லை.
10-ஆம் வகுப்பு தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் மாதிரிப் பள்ளிக்கு வரக்கூடும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா்கள் வராததால், அடுத்தடுத்த நிலையில் மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதன்படி, பெரும்பாலும் 450 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்ற மாணவா்களே மாதிரிப் பள்ளியில் சோ்ந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
11-ஆம் வகுப்பில் 3 குறிப்பிட்ட பாடப் பிரிவுகள் மட்டுமே இருப்பதால், பெரும்பாலான மாணவா்கள் ஆா்வம் காட்டுவதில்லை. இதேபோல, 9-ஆம் வகுப்புக்கு வரும் மாணவா்கள், மிகவும் சிறியவா்களாக இருப்பதால் விடுதியில் தங்கிப் படிக்க தயங்குகின்றனா். எனினும், நிகழ் கல்வி ஆண்டு முழுவதும் மாதிரிப் பள்ளிக்கான சோ்க்கை நடைபெறும். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வரை மாதிரிப் பள்ளிகளுக்கு சோ்க்கை நடைபெற்றது. குறைபாடுகளுக்குத் தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...