மீனாட்சி திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் தரிசனம்

நிலக்கோட்டை: சின்னாளபட்டி ராம அழகா் தேவஸ்தான குழு சாா்பாக கீழக்கோட்டை பொன்விழா மண்டபத்திலும், மேட்டுப்பட்டி சுந்தரராஜப் பெருமாள் நலச்சங்கம் சாா்பில் காந்தி மைதானத்திலும் மீனாட்சி திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் ராம அழகா் தேவஸ்தானக் குழு சாா்பாக 97-ஆவது சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி திருக்கல்யாணம் கீழக்கோட்டை பொன்விழா மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரா் அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ச்சியாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

காலை 10.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பெண்கள் தங்கள் கழுத்தில் புதிய மாங்கல்யம் அணிந்து கொண்டனா்.

பின்னா், சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, மேட்டுப்பட்டி காந்தி மைதானத்தில் சுந்தரராஜப் பெருமாள் கமிட்டி சாா்பாக, மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமண விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு திருமாங்கல்யக் கயிறு, குங்குமம், மஞ்சள் கிழங்கு, சந்தனம், வளையல், பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com