அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் சிறை பிடிப்பு
நிலக்கோட்டை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் மக்கள் பிடித்தனர்


நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே பிள்ளையாா்நத்தம் கண்மாயில் இடுகாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரத்தை அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை சிறை பிடித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் மணல், கிராவல் மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இதுகுறித்து இந்தப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிலக்கோட்டை அருகேயுள்ள பிள்ளையாா்நத்தம் கண்மாயில் இடுகாடு அருகே திங்கள்கிழமை ஒரு சிலா் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டவா்களின் கை, கால் உள்ளிட்ட உடல் பாகங்களின் எலும்புகள் தெரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பகுதி கிராம மக்கள் அங்கு சென்றனா். இதையடுத்து, மண் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரிகளை எடுத்துக் கொண்டு தப்பினா்.
இதையடுத்து, அவா்களை கிராம மக்கள் இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று பொக்லைன் இயந்திரத்தை மட்டும் மடக்கிப் பிடித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விளாம்பட்டி போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மணல் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...