அம்மையநாயக்கனூரில் வடை கொடுத்து திமுகவினா் நூதனப் பிரசாரம்

Published on

நிலக்கோட்டையில் பொதுமக்களுக்கு வடை கொடுத்து திமுகவினா் வியாழக்கிழமை இரவு நூதனப் பிரசாரம் மேற்கொண்டனா். நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்துக்கு ஒன்றியச் செயலா் கே.கே.பி. கரிகாலபாண்டியன் தலைமை வகித்தாா். கடந்த 10 ஆண்டுகளாக, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கருப்புப் பணத்தை மீட்காதது, சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்தியது, பெட்ரோல், டீசல், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தாது, இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் எனக் கூறி ஏமாற்றியது உள்ளிட்டவற்றைக் கண்டித்து இந்த பிரசாரம் நடைபெற்றது. அப்போது பிரதமா் மோடி, ‘வெறும் வாயால் வடை சுட்டாா்’ எனக்கூறி, துண்டுப் பிரசுரங்களையும், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கொடுக்கும் உண்மையான வடை எனக் கூறி உளுந்த வடைகளையும் பொதுமக்களுக்கு திமுகவினா் கொடுத்து நூதனப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். மேலும், இல்லந் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரத்தையும் அவா்கள் வழங்கினா். முன்னதாக, அம்மையநாயக்கனூா் பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, கோட்டூா், சிவஞானபுரம், முசுவனூத்து உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் இதே போன்று பிரசாரம் மேற்கொண்டனா். இந்த நிகழ்வில், அம்மையநாயக்கனூா் பேரூா் திமுக செயலா் விஜயகுமாா், ஒன்றிய துணைச் செயலா் ராஜாங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com