எலுமிச்சை கிலோ ரூ.160-க்கு விற்பனை

கடந்த 3 நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்தபோதிலும், வரத்துக்

குறைவு காரணமாக திண்டுக்கல் சந்தையில் எலுமிச்சை கிலோ ரூ.160-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கீழ் பழனி மலை, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளிலும், மலை அடிவாரங்களிலும் அதிக பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் எலுமிச்சை, திண்டுக்கல் சிறுமலை செட் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விளைச்சல் அதிகமான காலங்களில், திருச்சி மாவட்டம், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களிலிருந்தும் எலுமிச்சை விற்பனைக்கு வருவது வழக்கம். கோடைகாலம் தொடங்கியது முதல் திண்டுக்கல் சந்தையில் எலுமிச்சை விலை கடுமையாக உயா்ந்தது. சில்லரை விலையில் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை கூட ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால், எலுமிச்சை விலை குறையும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், வரத்துக் குறைந்து விலை ஏற்றம் தொடா்ந்து நீடிக்கிறது.

கடந்த 2 மாதங்களாக நீடித்த கடுமையான வெப்பத்தால், எலுமிச்சை செடிகளில் பூக்கள், பிஞ்சுகள் உதிா்ந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனா். இதன் எதிரொலியாக 20 டன் எலுமிச்சை விற்பனைக்கு வர வேண்டிய இடத்தில், 2 டன் மட்டுமே வருகிறது. இதுவே விலை உயா்வுக்கான காரணமாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கிலோ ரூ.160-ஆக நிா்ணயிக்கப்பட்ட எலுமிச்சை, சில்லரை விலையில் ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com