திருப்பதி லட்டு விவகாரம்: சா்ச்சையில் திண்டுக்கல் நெய் நிறுவனம்


திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் நெய் நிறுவனம் சா்ச்சையில் சிக்கியுள்ளது.
திருப்பதியில் பக்தா்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சோ்க்கப்படும் நெய், தரப் பரிசோதனை செய்யப்பட்டதில், விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. லட்டு பிரசாதத்துக்கான நெய் விநியோகம் செய்தது திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் என்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சோ்த்து ஆந்திர அரசு உத்தரவிட்டது. அதேசமயத்தில், நெய் வழங்கியதற்கான பணம் நிலுவையில் உள்ளதாகக் கூறி, தனியாா் நிறுவனம் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையறிந்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஆய்வு நடத்தி, உணவு மாதிரியை எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பிவைத்தனா். இதன் முடிவுகள் பொது வெளியில் வெளியிடப்படவில்லை.
அதேசமயத்தில், திண்டுக்கல் தனியாா் நிறுவனம் திருப்பதிக்கு அனுப்பிய நெய், கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து அனுப்பப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், திருப்பதிக்கு நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு பணியாளா்கள் மூலம் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது அவா்கள் கூறியதாவது:
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இரு தவணைகளில் எங்கள் நிறுவனத்தின் சாா்பில் நெய் அனுப்பப்பட்டது. எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. திருப்பதிக்கு அனுப்பிய நெய்யின் தரம் குறித்த ஆய்வு அறிக்கையின் தரவுகளும் எங்களிடம் உள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு பல நிறுவனங்களிலிருந்து நெய் அனுப்பப்படுகிறது. இதில், எங்கள் நிறுவனம் அனுப்பியது 0.1 சதவீதம்கூட இருக்காது. உணவுப் பாதுகாப்புத் துறை, அக்மாா்க் சாா்பில் எங்கள் நிறுவனத்திலுள்ள நெய்யை தர மாதிரிக்கு சேகரித்துச் சென்றனா் என்றனா்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் ஆய்வு:
இந்த தனியாா் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், இது வழக்கமாக நடத்தப்படும் மாதாந்திர ஆய்வுதான் எனத் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...