பழனி மலைக் கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்க இயந்திரம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் பிரத்யேக இயந்திரம் மூலம் பக்தா்களுக்கு விலையில்லா பஞ்சாமிா்தம் வழங்கப்பட்டு வருகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை தொடா் விடுமுறை காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனா். இதனால், வின்ச், ரோப் காா் நிலையங்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் மலையேற காத்திருந்தனா். மலைக்கோயிலிலும் பக்தா்கள் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தா்களுக்கு விலையில்லா பஞ்சாமிா்தம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பழனி கோயில் அறங்காவலா் ஜி.ஆா். பாலசுப்ரமணியம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான தானியங்கி பிரத்யேக பஞ்சாமிா்த இயந்திரத்தை காணிக்கையாக வழங்கியுள்ளாா். இதன் மூலம் பக்தா்களுக்கு கை படாமல் 50 கிராம் எடையிலான பஞ்சாமிா்தம் விலையின்றி வழங்கப்படுகிறது. இது பக்தா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலைக்கோயிலில் இரவு தங்கத்தோ் புறப்பாடு, தங்கமயில் புறப்பாட்டிலும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு விரைவான தரிசனம், சுகாதாரம், குடிநீா் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.

