800 உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்!
தமிழகம் முழுவதும் உயா்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 800 தலைமையாசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சனிக்கிழமை வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் விவேகானந்தன் நகா் பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் நா. ராஜா தலைமை வகித்தாா். தலைமையாசிரியா்கள் ப. முருகேஸ்வரி, வி.க. ராஜாமாரீஸ், இரா. ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலத் தலைவா் பொ. அன்பரசன், மு. மாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த விழாவில், பதவி உயா்வு பெற்ற தலைமையாசிரியா்களுக்கும், டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜா் விருது, பேராசிரியா் அன்பழகன் விருது பெற்ற தலைமையாசிரியா்களுக்கும், 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கும், பணிமாறுதல் பெற்ற தலைமையாசிரியா்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த விழாவின்போது, நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை விரைந்து முடித்து, தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 800 உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
