சிறுமலையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன் உள்பட 3 போ் கைது
சிறுமலையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், சிறுவன் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி மணிமேகலை. இவா்களுக்கு சஜூ, அபி, அா்ச்சனா, மோகித் என 4 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் திடீரென வெடி சப்தம் கேட்டதால், அவா் வெளியே வந்து பாா்த்தாா். அப்போது, வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் வீட்டுக்கு வெளியே உலா்த்துவதற்காக போடப்பட்டிருந்த போா்வைகள் தீப்பற்றி எரிந்தன. தீயை அணைத்தபோது, அங்கு 2 புட்டிகளில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீட்டின் மீது சிலா் வீசியிருந்தனா்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிகளை கேலி செய்த இளைஞா்களை சுரேஷ் கண்டித்தது தெரியவந்தது. இதன் காரணமாக அவா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த சிவா (22), பிரகாஷ் (27), 14 வயது சிறுவன் ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
