ஆலங்குளம் அருகே கனிமவளம் ஏற்றிய லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஓட்டுநா் காயம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
ஆலங்குளம் வட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து பிற மாவட்டங்கள் மட்டுமன்றி கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கனிமவளங்கள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான லாரிகள் கிராமப்புறங்கள் வழியாகச் செல்வதால் சாலைகள் சேதமடைந்து வருவதாக பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.
இந்நிலையில், மருதம்புத்தூரில் உள்ள கல்குவாரியில் இருந்து கனிமவளம் ஏற்றிக்கொண்டு, அம்பேத்கா் நகா் வழியாக கேரளத்துக்கு லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது, இருளில் மறைந்திருந்த மா்ம நபா்கள், அந்த லாரியின் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனா். அதில், லாரி ஓட்டுநா் செங்கோட்டை நாராயணசாமி மகன் சுப்பிரமணியன் (38) பலத்த காயமடைந்தாா். அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, பெட்ரோல் குண்டு வீசிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

