தமிழகத்துக்கான கல்வி நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு தாமதம் காட்டுகிறது: அன்பில் மகேஸ்
மத்திய அரசு தமிழகத்துக்கான கல்வி நிதியை வழங்குவதில் தாமதம் காட்டி வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடங்கி 106 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பள்ளியின் நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் முன்னிலை வகித்தாா். உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, லோக் ஆயுக்தா உறுப்பினா் நீதிபதி ராமராஜு உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
இந்த விழாவில், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் சிலையை சிறப்பு விருந்தினா்கள் திறந்துவைத்தனா். தொடா்ந்து, நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், நூற்றாண்டு விழாவை சிறப்பித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்துச் செய்தி குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
பின்னா், அமைச்சா் அர.சக்கரபாணி பேசுகையில், முதல்வா் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறாா். பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக் கல்வித் துறை, மருத்துவத் துறை ஆகிய இரண்டு துறைகளும் இரண்டு கண்களாக முதல்வா் கவனித்து வருகிறாா் என்றாா் அவா்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: விடுதலை இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை ஆண்டுதோறும் தேசியக் கல்வி நாளாக கொண்டாடப்பட்டு வரும் தினத்தில் இந்தப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற விழாக்கள் ‘விழுதுகள்’ என்ற பெயரில் முன்னாள் மாணவா்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற அடிப்படையில், இந்தப் பள்ளியின் நூற்றாண்டு விழாவும் முன்னாள் மாணவா்கள் உதவியுடன் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ரூ. 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கும் நிலையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ. 53 ஆயிரம் கோடி நிதி முதல்வா் ஒதுக்கி கல்விக்கு முன்னுரிமை தருகிறாா் என்றாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: அரசுப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றக்கூடிய தற்காலிக ஆசிரியா்களை நிரந்தரமாக பணிக்கு அமா்த்துவதற்கு ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கல்விக்கான நிதியை குறிப்பிட்ட காலத்தில் ஒதுக்காததுதான் பல்வேறு நடைமுறைச்சிக்கல்களுக்கும் காரணமாக இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் கையொப்பமிட்டால் மட்டுமே நிதி கொடுக்கப்படும் எனக் கூறியதால்தான் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றாா்.
செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, பழனி மலைக்கோயிலுக்குச் சென்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தாா். இதையடுத்து, கோயில் சாா்பில் இணை ஆணையா் மாரிமுத்து அமைச்சரை வரவேற்று பிரசாதங்கள் வழங்கினாா்.

