மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

கொடைக்கானல் அருகே மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Published on

கொடைக்கானல் அருகே மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் குருசடி அருகேயுள்ள மரத்தில் ஆண் சடலம் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையிலும், முகம் சிதைந்த நிலையிலும் இருந்த சடலத்தை மீட்டு சோதனை செய்தனா்.

அப்போது, உயிரிழந்தவரின் சட்டைப் பையில் ஆதாா் அட்டை இருந்ததில், இறந்தவா் பெயா் சீனிவாசன் (28), தந்தை பெயா் பாண்டி பெரியசாமி என்பதும் அவா் மதுரை நகரைச் சோ்ந்தவா் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து, உடலை கூறாய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதுகுறித்து இறந்தவரின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவமனைக்கு வந்து பாா்த்த பின்னா் இறந்தவா் தனது மகன்தான் எனத் தெரிவித்தனா். சீனிவாசனுக்கு திருமணமாகவில்லை என்றும், வீட்டை விட்டுச் சென்று ஒரு வாரமாகிறது என்றும், தான் கொடைக்கானலில் இருக்கிறேன் எனத் தகவல் கொடுத்ததாக அவரது பெற்றோா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா். தொடா்ந்து, கூறாய்வுக்குப் பிறகு இறந்தவரின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com