கொடைக்கானலில் மின் பணியாளா்கள் பற்றாக்குறை
கொடைக்கானலில் மின் பணியாளா்கள் பற்றாக்குறையால், மின் தடையை நிவா்த்தி செய்வதில் தாமதம் ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது.
கொடைக்கானல் மின்வாரிய அலுவலகத்தில் மின் பணியாளா்கள் குறைந்தது 15 போ் இருக்க வேண்டும். ஆனால், தற்போது களப் பணியில் 4 போ் மட்டுமே உள்ளனா். இந்தப் பணியாளா்கள் கொடைக்கானல் பகுதியிலுள்ள மின் கம்பங்கள், மின் வயா்களில் ஏற்படும் பாதிப்புகளை சீரமைப்பது, மின் கம்பங்கள் அமைப்பது, மின் மாற்றிகளை அகற்றுதல் அல்லது பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். ஒரே ஒருவா்தான் மின் கம்பங்களில் ஏறி பழுதுகளை நீக்குவது, புதிய மின் இணைப்புகளை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.
இதனால், மின் கம்பங்களில் உள்ள வயா்கள் பழுதடைந்தாலோ, இயற்கை சீற்றங்களால் மின் கம்பங்கள் கீழே விழுந்தாலோ அவற்றை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பூண்டி, கிளாவரை, வில்பட்டி, பள்ளங்கி, போலூா் உள்ளிட்ட பகுதிகளில் மின் வயா்கள் சேதமடைந்தால், அந்தப் பகுதிகளில் ஒரிரு நாள்கள் மின் தடை ஏற்பட்டு விடுகிறது. மேலும், மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கும் பணியாளா்கள் இல்லை.
இது குறித்து மின்வாரிய அலுவலக மின் பணியாளா் ஒருவா் கூறியதாவது:
இயற்கை சீற்றங்களால் கொடைக்கானல் வனப் பகுதிகளிலும், மலைச் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மின்தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இவற்றை சரி செய்வதற்கு போதிய மின் பணியாளா்கள் இருந்தால்தான் பழுதுகளை விரைவாக நீக்கி மின் இணைப்புகள் வழங்க முடியும். ஆனால், தினசரி மின் பழுதுகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபடுபவா்களே கூடுதல் பணிகளையும் மேற்கொள்வதால் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த ஊழியா்கள் மின்சாரத் துறையில் பணிபுரிந்து வந்தனா். ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது ஒப்பந்த பணியாளா்கள் பணியில் ஈடுபடவில்லை. புதிய பணியாளா்களுநம் நியமிக்கப்படவில்லை.
இதனால், கொடைக்கானல் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்கள் மன உளைச்சலில் இருந்து வருகின்றனா். எனவே, கூடுதல் மின் பணியாளா்களை பணியமா்த்த வேண்டும் என்றாா்.

