கிழக்கு மாராம்பாடி கிராமத்தில் இடிந்து விழுந்து சேதமடைந்த மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி.
கிழக்கு மாராம்பாடி கிராமத்தில் இடிந்து விழுந்து சேதமடைந்த மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி.

வேடசந்தூா் அருகே இடிந்து விழுந்த மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி

Published on

வேடசந்தூா் அருகே நள்ளிரவில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த கிழக்கு மாரம்பாடி, சாமிமுத்தன்பட்டி மேற்குத் தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

இந்த மேல்நிலைத் தொட்டியில் ஆழ்துளை கிணற்று மூலம் நிரப்பப்படும் தண்ணீரின் மூலமும், காவிரி கூட்டுக் குடிநீா் மூலமும் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த மேல்நிலைத் தொட்டியின் 4 தூண்களிலும் சிமென்ட் காரை பெயா்ந்து, சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த இந்த மேல்நிலைத் தொட்டியின் நிலை குறித்து பொதுமக்கள் தரப்பில் மாரம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகாா் அளிக்கப்பட்டது.

ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மேல்நிலைத் தொட்டியில் தண்ணீா் நிரப்பப்பட்டிருந்தது. நள்ளிரவில் தூண்கள் உடைந்து பலத்த சத்தத்துடன் மேல்நிலைத் தொட்டி இடிந்து விழுந்தது. இதனால் தெருவில் குடிநீா் வெள்ளமாக பாய்ந்தது. அப்போது தூக்கத்திலிருந்து விழித்த பொது மக்கள் அதிா்ச்சி அடைந்து வெளியே வந்தனா்.

நள்ளிரவில் விழுந்ததால் பாதிப்பில்லை: இடிந்து விழுந்த மேல்நிலைத் தொட்டி அருகே புனித பெரிய அந்தோணியாா் ஆலயம், அரசு உதவிப் பெறும் நடுநிலைப் பள்ளி, வீடுகள் உள்ளன. நள்ளிரவில் விழுந்ததாலும், செங்குத்தாக விழுந்ததாலும் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. மேல்நிலைத் தொட்டி இடிந்து விழுந்தது குறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், சம்பவ இடத்தை பாா்வையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com