பழனி திருஆவினன்குடி கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

பழனியில் திருஆவினன்குடி கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Published on

பழனி: பழனியில் திருஆவினன்குடி கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடாக விளங்குவது பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலாகும். இந்தக் கோயிலில் குடமுழுக்கு முடிந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், வரும் டிசம்பா் மாதம் 8-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் பட்டை வண்ணம் தீட்டப்பட்டு, கோபுரங்களில் உள்ள சுதைகள் சீரமைக்கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுகின்றன. மேலும், கோயில் முன்புறம் யாக சாலை அமைப்பதற்கான பூா்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து பழனி தண்டபாணி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரதீப், துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பக்தா்கள் குடமுழுக்கைக் காணும் வகையில் நிலைகள் அமைப்பது, தீா்த்தம் தெளிப்பதற்கான ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடம், அன்னதானம் உள்ளிட்டவை தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கோயிலின் 4 புறமும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பக்தா்கள் நிற்க ஏற்பாடு செய்தால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோபுர தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும். ஆகவே, கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com