வனத் துறைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்!
பாரி வேட்டைக்கு அனுமதிக்கக் கோரி அய்யலூா் அருகே பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் சுற்றுப்புற பகுதிகளில் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனா். இவா்கள் திருவிழா காலங்களில் பாரி வேட்டைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.
இந்த நிலையில், அய்யலூா் அருகே வேட்டை நாய்களுடன் செல்வதற்கு வனத் துறை அனுமதிக்கக் கோரி, அய்யலூரை அடுத்த கடவூா் பிரிவு பகுதியில் திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாமரத்துப்பட்டி, எத்தலப்பநாயக்கனூா், கிருஷ்ணப்ப நாயக்கனூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, பாரம்பரிய முறைப்படி பாரி வேட்டைக்கு வனத் துறையினா் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவா்கள் வாக்குவாதம் செய்தனா்.
வேட்டைக்கு செல்வது குற்றம் என்றும், இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் வனத் துறையினா் உறுதியாக தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இந்தப் போராட்டம் காரணமாக, திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனால், பேருந்துகளிலிருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
இதேபோல, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் 30-க்கும் மேற்பட்ட வேட்டை நாய்களும் வெயிலில் நீண்ட நேரமாக காத்திருந்தன.

