பாதயாத்திரை பக்தா்களுக்காக பழனியில் நவசண்டீ ஹோமம்

பாதயாத்திரை பக்தா்களுக்காக பழனியில் நவசண்டீ ஹோமம்

Published on

பழனி வீரதுா்க்கையம்மன் கோயிலில் வியாழக்கிழமை பாதயாத்திரை பக்தா்கள் நலனுக்காக நவசண்டீ ஹோமம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரை வருகின்றனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தா்கள் எவ்வித இடா்பாடுமின்றி தண்டாயுதபாணியை தரிசித்து ஊா் திரும்ப வேண்டிய பழனி திருக்கோயில் சாா்பில் ஆண்டுதோறும் நவசண்டீ ஹோமம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, புதன்கிழமை மலைக்கோயில் ஆனந்த விநாயகா் சந்நிதியில் நவசண்டீ ஹோமத்துக்கு முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை அடிவாரம் வடக்கு கிரிவீதி வீரதுா்க்கையம்மன் கோயிலில் சண்டீஹோமம் நடைபெற்றது. உச்சிக் காலத்துக்கு முன்னதாக பிரதானமாக கலசங்கள் வைக்கப்பட்டு பல்வேறு வகையான கனிகள், மூலிகைகள் கொண்டு ஸ்நபன ஹோமம், சண்டீ ஹோமம் ஆகியன நடைபெற்றன.

சித்தனாதன் விபூதி ஸ்டோா்ஸ் உபயமாக நடைபெற்ற இந்த யாக பூஜைகளை திருக்கோயில் தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், செல்வசுப்ரமண்ய சிவாசாரியா் உள்ளிட்டோா் செய்தனா். பூா்ணாஹூதி முடிந்த பின் கலசங்கள் மேளதாளங்களுடன் கோயிலை வலம் வர செய்யப்பட்டு, மூலவா் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோயில் கண்காணிப்பாளா் ரேவதி, சித்தனாதன் சன்ஸ் தனசேகா், பழனிவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com