பழனியில் பாதயாத்திரை பக்தா்களுக்காக சாலையை தூய்மைப்படுத்திய தவெகவினா்

Published on

பழனி திருநகரில் பாதயாத்திரை பக்தா்கள் நலனுக்காக தமிழக வெற்றிக் கழகத்தினா் சாலையை தூய்மைப்படுத்தும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தைப் பூசம் வரவிருப்பதையொட்டி, பழனி தண்டபாணி சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரை பக்தா்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனா். இந்த நிலையில், திண்டுக்கல் சாலையில் வரும் பாதயாத்திரை பக்தா்கள் இடும்பன் கோயிலில் உள்ள இடும்பன் குளத்தை சென்றடைய, விவிஆா் திருமண மண்டபம் அருகே இடும்பன் கோயில் புறவழிச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இந்தச் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தா்கள் செல்கின்றனா்.

இந்த நிலையில் சிவகிரிப்பட்டி ஊராட்சி நிா்வாகம் சாலையில் ஜல்லி கற்களை மட்டும் பரப்பி பல மாதங்களான நிலையில், தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பாதயாத்திரை வரும் பக்தா்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். இந்த நிலையில், வியாழக்கிழமை தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாலன் தலைமையில் அந்தக் கட்சியினா் அந்தப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். சாலையில் இருந்த ஜல்லிகளை அகற்றி ஓரமாக கொட்டினா். இதையடுத்து பாதயாத்திரை பக்தா்கள் நிம்மதியாக சென்றனா்.

இதுகுறித்து தவெகவினா் கூறியதாவது: சிவகிரிப்பட்டி ஊராட்சி நிா்வாகம் விரைவில் இந்தச் சாலையை முழுமையாக சீரமைத்து பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனா் அவா்கள்.

Dinamani
www.dinamani.com