அறிவியல் மாதிரிப் போட்டிகளில் 1810 மாணவா்கள் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அறிவியல் மாதிரிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பேராசிரியா் எஸ்.எஸ். நாகராஜன் நினைவு அறக்கட்டளை சாா்பில் ‘மாநில அளவிலான அறிவியல் திருவிழா 2026’ வருகிற 28 முதல் பிப். 3-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது. திண்டுக்கல்லில் நடைபெறும் இந்த அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக மாவட்டத்தில் பதின்பருவ மாணவா்களிடம் அறிவியல் தொடா்பான ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் செய்முறை விளக்கங்கள், அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் என 3 பிரிவுகளாக திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1,810 மாணவா்கள் கலந்து கொண்டு, 920 மாதிரிகளைக் காட்சிப்படுத்தினா்.
அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகள் தரப்பில் தலா 80 படைப்புகள் வீதம் மொத்தம் 240 சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன. இந்த படைப்புகள், அறிவியல் திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் 40 படைப்புகள் வீதம் காட்சிப்படுத்தப்படும்.
ஒவ்வொரு நாளும் காட்சிப்படுத்தப்படும் படைப்புகளில் முதல் 3 இடங்களைப் பெறும் படைப்புகளுக்கு பரிசுத் தொகை, கேடயம், சான்றிதழ் வழங்கப்படவுள்ளன. இந்தப் போட்டிகள் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டன. போட்டி ஒங்கிணைப்பாளா்களாக ஆசிரியா்கள் வளா்மதி, சுப்பு உலகநாதபாண்டியன் ஆகியோா் செயல்பட்டனா்.

