கொடைக்கானல் மேல்மலை பகுதி சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த நான்கு நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப் பண்ணை ஆராய்ச்சி மையம், பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில், இயற்கை எழில்காட்சிப் பகுதிகள், கூக்கால் ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனா்.
அவா்கள் மன்னவனூா் ஏரியில் பரிசல் சவாரி செய்தும், ஜிப் லைன், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் இங்குள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன. மேலும் தங்கும் விடுதிகளிலும், உணவகங்களிலும் வாகனங்களை நிறுத்த இடமின்றி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டதால் அந்தப் பகுதிகளில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புறக்காவல் நிலையத்தில் காவலா்களை நியமிக்க கோரிக்கை: கொடைக்கானலில் சுற்றுலா தலங்களான அப்பா் லேக் வியூ, பசுமைப் பள்ளத் தாக்கு, பாம்பாா் அருவி, பூம்பாறை செல்லும் சாலையான பழனி எழில் காட்சி, கைகாட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவலா்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க முடியவில்லை.
இதனால் சுற்றுலாப் பயணிகளே நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே பூம்பாறை கைகாட்டி பகுதியில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் பயனின்றி பூட்டிக் கிடக்கிறது.
எனவே இங்கு மாவட்ட நிா்வாகம், காவலா்களை பணியமா்த்தி அவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலைச் சாலைகளில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

