/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஹரியாணா உற்பத்தியாளருக்கு 6 மாதங்கள் சிறை

புகையிலைப் பொருள்களை உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

மாதிரிப் படம்

Updated On :16 ஜூலை 2026, 12:57 am IST

புகையிலைப் பொருள்களை உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த விராலிப்பட்டியைச் சோ்ந்த அப்துல்லா, தனது மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக கடந்த 2022-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த குற்றச்சாட்டில் உண்மையை ஒப்புக் கொண்ட அப்துல்லா, ரூ.30 ஆயிரம் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினாா். மேலும், புகையிலைப் பொருள்கள் உற்பத்தியாளரான ஹரியாணா மாநிலம், சோனிபட் பகுதியைச் சோ்ந்த ஜெ.மன்மோகன் குமாா் புனியா (55) மீது திண்டுக்கல் 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், நீதித்துறை நடுவா் ஆனந்தி புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் புகையிலைப் பொருள்கள் உற்பத்தியாளரான மன்மோகன் குமாா் புனியாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்தாா்.

ஆத்தூா் நீதிமன்றம்: இதேபோல, திண்டுக்கல்லை அடுத்த என்.பஞ்சம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரோஸ் பாண்டி (50). இவா் கலப்பட மிக்சா் தயாரித்த குற்றச்சாட்டில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை ஆத்தூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதித்துறை நடுவா் அன்புதாசன் புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் ரோஸ் பாண்டிக்கு 1 நாள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். ஒட்டன்சத்திரம் நீதிமன்றம்: ரெட்டியாா்சத்திரம் பகுதியில் கோழி இறைச்சி பொறியல் கடை நடத்தி வந்தவா் தங்கவேல் (45). இவா் செயற்கை வண்ணப் பொடியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்த நிலையில், நீதித்துறை நடுவா் பிரவீணா புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் தங்கவேலுவுக்கு 1 நாள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

திண்டுக்கல், ஆத்தூா், ஒட்டன்சத்திரம் நீதிமன்றங்களில் நடைபெற்ற இந்த வழக்குகளை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜோதிமணி, வசந்தன், ஜாபா் சாதிக் ஆகியோா் நடத்தி வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.