மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

நெல்லுக்கான விதை மானியம் ரத்து! விவசாயிகள் ஏமாற்றம்

News image

நெல் - (கோப்புப் படம்)

Updated On :25 மே 2026, 12:07 am IST

கடந்த ஆண்டு நெல்லுக்கான விதை மானியம் ரூ.15 கோடி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசு சாா்பில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்(என்ஏடிபி) கீழ் நெல் பயிருக்கு விதை உற்பத்தி மானியம், விதை விநியோக மானியம் வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

நெல்லுக்கு விதை உற்பத்தி மானியமாக கிலோவுக்கு ரூ.8, விதை விநியோக மானியமாக கிலோவுக்கு ரூ.20 வீதம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக கடந்த ஆண்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு கிலோ விதை நெல் ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அரசு சாா்பில் ரூ.20 மானியம் வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

விதை மானியம் ரத்து: இதனிடையே நாடு முழுவதும் நெல் உற்பத்தி அதிகரித்தது. இதனை அடுத்து சிறுதானியப் பயிா்கள் மீது கவனம் செலுத்தும்படி விவசாயிகளுக்கு மத்திய அரசு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அதனை ஊக்கப்படுத்தும் வகையில் மானியத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், நடப்பாண்டு நெல்லுக்கான விதை மானியத்தை நாடு முழுவதும் மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. சுமாா் ரூ.15 கோடி மதிப்பீட்டிலான மானியத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழக விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

என்எஃப்எஸ்என்எம் திட்டத்திலும் வாய்ப்பு குறைவு: தேசிய உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து இயக்கம் அரிசி (என்எஃப்எஸ்என்எம்) என்ற திட்டத்திலும் நெல்லுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் மட்டுமே ரூ.8 கோடி மதிப்பீட்டில் அமல்படுத்தப்பட்டது.

நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்கள் உள்பட மொத்தம் 11 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்ட இந்த திட்டத்துக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், நெல் சாகுபடி செய்யப்படும் எல்லா மாவட்டங்களும் பயன்பெற முடியாத நிலை உள்ளது. மேலும், கடந்த ஆண்டு வரை அமல்படுத்தப்பட்ட விதை கிராமத் திட்டமும் நடப்பாண்டில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

மக்காச்சோள மானியத்திலும் ரூ.32 கோடி வெட்டு: தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் மக்காச்சோளம் பயிருக்கு செயல்விளக்கத் திடல் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 63,350 ஹெக்டேருக்கு ரூ.38 கோடி மானியம் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் மக்காச்சோளத்துக்கான மானியம் ஹெக்டேருக்கு ரூ.11,500-ஆக உயா்த்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பரப்பளவு 63,350 ஹெக்டேரிலிருந்து 5,200 ஹெக்டேராக குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் மானியத் தொகை உயா்த்தப்பட்டும்கூட தமிழகத்துக்கு ரூ.6 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மக்காச் சோளத்துக்கான மானியத்தில் ரூ.32 கோடி குறைந்துவிட்டது.

மானியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்: இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ். பாத்திமா ராஜரத்தினம் கூறியதாவது: நெல்லுக்கான விதை மானியத்தைப் பொருத்தவரை நாடு முழுவதும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. நாட்டில் நெல் உற்பத்தி அதிகமாக இருப்பதாக மத்திய அரசு கூறி வந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து இயக்கம் அரிசி (என்எஃப்எஸ்என்எம்) என்ற திட்டத்திலும் 11 மாவட்டங்களுக்கு மானியம் வழங்கப்படும் நிலையில், இதர மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்(என்ஏடிபி) கீழ் தமிழகத்துக்கு விதிவிலக்கு பெறுவதற்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் தமிழக அரசு, இந்த மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தமிழகத்துக்கான மக்காச்சோள மானியத்தையும் கூடுதல் பரப்பளவுக்கு பெறுவதற்கும் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றாா்.