அறம் சார்ந்த அரசியலையே கம்பராமாயணம் மூலம் கம்பன் வலியுறுத்தியுள்ளார் என மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கம்பன் அறக்கட்டளை விழாவில் மகளிர் அரங்கில் பங்கேற்ற பேராசிரியைகள் சுட்டிக்காட்டினர்.
மதுரை கம்பன் கழக அறக்கட்டளை 10ஆம் ஆண்டு, 3ஆம் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை மகளிர் அரங்கம் நடைபெற்றது. கம்பனில் அறமும் அரசியலும் எனும் பொருளில் நடைபெற்ற அரங்கத்துக்கு சாரதா நம்பி ஆரூரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
ராம அவதாரம் என்பதே அறத்தை நிலைநிறுத்துவதற்காக வந்தது என்பார்கள். அறம் என்பது நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிப்பதே ஆகும். அறங்களுக்கு 32 பொருள்கள் கூறப்படுகிறது. எமனுக்கு அறம் எனும் பொருள் உண்டு. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் அறம் எனும் தமிழ்ச்சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் கிடைக்கவில்லை என்கிறார்கள். வடமொழியில் தர்மம் என்பதே தமிழில் அறம் எனப்படுகிறது.
நீதிநூல்கள் தலைவன் தனது கீழுள்ள பணியாளர்களுக்கு கூறுவது போலவே அறத்தை வலியுறுத்துகிறது. புராணங்கள் நண்பர்களுக்குள் அறத்தை பேசுவது போல உள்ளது. காப்பியங்கள் மட்டுமே காதலர்கள் மொழிபோல அறத்தை வலியுறுத்துகின்றன. அறம் என்பது காலத்துக்கு ஏற்ப மாறுபடுபவையாகும். சங்க இலக்கியத்தில் அறம் எனக்கூறப்பட்டவற்றை திருக்குறளில் வள்ளுவர் புறந்தள்ளியுள்ளார்.
அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதை வலியுறுத்துகிறார் கம்பர். அவர் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துகிறார். மண்ணாசை, பெண்ணாசை ஆகிய தனிமனித ஆசைகளால் அரசியல் சீரழிகிறது. தசரதன் மனைவி மீது கொண்ட அன்பே ராமனை காட்டுக்குச் செல்லவைக்கிறது. வாலியின் அழிவுக்கும், ராவணன் அழிவுக்கும் பெண்ணாசையே காரணமாகிறது என்றார்.
கம்பராமாயணத்தில், அரசியலும் அறமும் எனும் பொருளில் சுமித்திரை குறித்து பேராசிரியை ராம.செüந்திரவள்ளி பேசியதாவது: அறமும், அரசியலும் சேர்ந்திருக்க வேண்டும் என்பதே கம்பரின் ஆசை. அறவழி நடக்கும் அரசாட்சியிலே மக்கள் மகிழ்ச்சியடைவர். கம்பராமாயணத்தில் சுமத்திரை இரு குழந்தைகளுக்கு தாயானவள். அவள் மனத்தால், உடலால் வலிமை பெற்றவள். தியாகத்தின் திருவுருவானவள்.
ராமனுக்கு சுமத்திரை மீதுதான் அன்பும் நம்பிக்கையும் அதிகம். ஆகவேதான் காட்டுக்கு ராமன் செல்லும்போது கோசலையைச் சந்தித்துவிட்டு சுமத்திரையை ராமன் சந்திக்கிறார். அதன்பிறகே சீதையை சந்திக்கச்செல்கிறார். அதாவது தசரதனுக்கும், கோசலைக்கும் பாதுகாப்பு அரணாக சுமத்திரை விளங்குவாள் என்ற நம்பிக்கை ராமனுக்கு ஏற்படுவதே இதற்கு காரணம்.
சாதாரணமாக தமது பிள்ளை பெரிய தலைவனாகவேண்டும் என தாய்மார்கள் நினைப்பதுண்டு. ஆனால், சுமத்திரை மட்டுமே தனது மகன் லெட்சுமணன் ராமனுக்குச் சேவைசெய்யும் தொண்டனாக இருக்கவேண்டும் எனக்கூறுகிறாள். அதுவே லெட்சுமணனின் விருப்பமும் ஆகும். ஆகவே, குழந்தையின் விருப்பமறிந்து கருத்தைத் தெரிவிக்கும் சிறந்த தாயாகவும் அவள் விளங்குகிறாள். ஆகவேதான் சுமத்திரையை அறத்தின் உருவமாக கம்பர் காட்டுகிறார் என்றார்.
கம்பனில் அரசியல் எனும் பொருளில் தாரை குறித்து பாரதி பாஸ்கர் பேசியதாவது: அறமும் அரசியலும் பிரிக்கமுடியாதவை என்றே கம்பன் நம்பினார். ஆனால், தற்போது அறமும், அரசியலும் பிரிந்தே உள்ளது. சமூக அறமே அரசியலை வழிநடத்தியுள்ளது. அரசு நிர்வாகத்தையே கம்பர் அரசியலாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இப்போதைய நிலை அப்படி இல்லை. அரசியல் என்பது தர்மம் என்ற நிலை போய் சூதாட்டமாகிவிட்டது.
நமது மத நம்பிக்கையின்படி குறிப்பிட்ட திருக்கோயிலுக்குப் போனால் குறிப்பிட்ட நன்மை நடக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி அகல்யா, குந்திதேவி, மண்டோதரி, திரெüபதி, கதாரை என ஐந்து பெண்கள் பெயர் கூறினாலே பாவம் தீரும் என்பதும் நம்பிக்கையாகும்.
செய்வன செய்தல், தீயன சிந்தியாமை, இனிமையாகப் பேசுதல், மெய்யென வழங்கல், ஆசையின்றி இருப்பது ஆகியவை சிறந்த தலைவருக்குரிய குணங்களாகும். சமூக அறமே அரசியல் அறமாகிறது. தனிமனித ஒழுக்கமே அரசியல் ஒழுக்கத்தை நிர்ணயிக்கிறது. அதன்படி ஆசையே இன்றி இருந்தவள் தாரை. அங்கதனை அரசனாக்கும் வாய்ப்பிருந்தும் அதை மறுத்தவள் தாரை. அவளது குரலை இசையினும் இனிது என லட்சுமணன் பாத்திரம் மூலம் கூறுகிறார் கம்பர். சுக்ரீவனுக்கு ராமன் துணை நிற்பது வாலிக்குத்தெரியாத நிலையில் தாரை அதை அறிந்து கூறுகிறாள். தாரையின் பேச்சை வாலி கேட்டிருந்தாள் அவன் அழிந்திருக்கமாட்டான் என்றார்.
நிகழ்ச்சியில் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் பத்மலெட்சுமிசீத்தாராமன் வரவேற்றார். பேராசிரியர் கு.ராமமூர்த்தி நன்றி கூறினார்.
கவிதைப் பட்டிமன்றம்: பின்னர் நடைபெற்ற கம்பன் கவிதையில் பெரும்புகழ் பெறுபவர் சிலை வளர்த்த செல்வனே... சிறையிருந்த செல்வியே... எனும் தலைப்பிலான கவிதைப் பட்டிமன்றத்துக்கு பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமை வகித்தார். சிலை வளர்த்த செல்வனே எனும் பொருளில் பேராசிரியர் எம்.ராமச்சந்திரன், முத்துசந்தானமும், சிறையிருந்த செல்வியே எனும் பொருளில் கவிஞர் கோ.மணிவண்ணன், மீனாட்சிபட்டாபிராமன் ஆகியோரும் கவிதை பாடினர். வழக்குரைஞர் வி.ராமலிங்கம் வரவேற்றார். புலவர் கி.வேலாயுதம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?

இங்கிலாந்து ரசிகர்கள் எனது பெயரை முழக்கமிடுவதில்லை..! ஜேமி ஓவர்டன் நெகிழ்ச்சி!

நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
