மலேசியாவில் சிறு மற்றும் குறு தொழில்கள் தொடங்க தமிழக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று மலேசிய அரசின் தென்னிந்தியாவுக்கான கவுன்சில் ஜெனரல் ஃப்ஜாராஜாம் கூறினார்.
மலேசியாவில் உள்ள ஆசிய இ பல்கலைக்கழகத்தின் தமிழகப் பிரிவை பார்வையிடுவதற்காக சனிக்கிழமை மதுரை வந்த ஃப்ஜாராஜாம் செய்தியாளர்களிடம் கூறியது:
மலேசியாவும், இந்தியாவும் சீரான வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இங்குள்ள வளங்களைப் பயன்படுத்த இளைஞர்கள் தயங்குகின்றனர். வேலையில்லாமல் திண்டாடும் பெரும்பாலான இளைஞர்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்க முன்வருவதில்லை. இந்த நிலை மாற வேண்டும், மலேசியாவில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது. இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மலேசியாவில் சிறு, குறு தொழில் செய்ய விரும்பும் வெளிநாட்டவர், குறிப்பாக இந்தியர்களுக்கு இணையவழி நுழைவுஇசைவுச் சீட்டு வழங்கும் முறை, உடனடி கடன் வசதி, இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை மலேசிய அரசு செயல்படுத்தி உள்ளது. மலேசியர்களும், இந்திய தமிழர்களும் ஒரே மாதிரியான கலாசாரத்தை கொண்டவர்கள். இந்த நிலை தொழில்துறையிலும் நீடிக்க வேண்டும் என்றார்.
சொக்கிகுளத்தில் உள்ள வேல்ஸ் அகாதெமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசிய பல்கலைக்கழகங்கள் அளிக்கும் சலுகைகள், இளம் தொழில்முனைவோருக்கு மலேசியாவில் உள்ள வாய்ப்புகள் குறித்து தொழில்முனைவோர்கள் மற்றும் மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடினார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், மதுரை-மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கும் இடையே விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும், மலேசியா தொழிலதிபர்கள் மதுரையில் தொழில்முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேல், தலைவர் என்.ஜெகதீசன், வேல்ஸ் அகாதெமி நிர்வாக இயக்குநர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







