வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

பள்ளிக் கல்வியில் சவால்கள்!

பள்ளிக் கல்வியின் நிலை குறித்து நீதி ஆயோக் அமைப்பு விரிவான ஆய்வு மேற்கொண்டு, கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், நீடிக்கும் குறைபாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 6:02 am IST

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் நிலை குறித்து நீதி ஆயோக் அமைப்பு விரிவான ஆய்வு மேற்கொண்டு, கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், நீடிக்கும் குறைபாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அரசு, தனியார் என 14.71 லட்சம் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் 24.69 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். நாடு முழுவதும் 7.3 லட்சம் தொடக்கப் பள்ளிகள் இருக்கும் நிலையில், 1.64 லட்சம் மட்டுமே மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

12-ஆம் வகுப்பை முடிப்பதற்குள் பத்தில் நான்கு பேர் படிப்பைக் கைவிடுகின்றனர்.கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 14 வயதுடன் இலவசக் கல்வி முடிந்துவிடுவதால், அதன் பின்னர் குடும்பத்தின் பொருளாதார நிலை, அதிக கட்டணம், போக்குவரத்துச் செலவு, பாடப் புத்தகங்களுக்கான செலவு, தனிப் பயிற்சிக்கான செலவு (டியூஷன்) போன்ற பல காரணங்களால் இடைநிற்றல் அதிகரிக்கிறது.

நாடு முழுவதும் 1,04,125 பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இதில் தமிழகத்தில் உள்ள 3,671 பள்ளிகள் அடக்கம். தமிழகத்தில் இந்த ஓராசிரியர் பள்ளிகளில் 95 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். நாடு முழுவதும் இன்னமும் 14,505 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை; 59,829 பள்ளிகளில் கைகழுவும் வசதி இல்லை. இவை ஒருபுறம் இருக்க, மாணவர்களின் கற்றல் திறன்தான் கவலை அளிக்கும் விஷயமாகும்.

சாதாரண கழித்தல் கணக்குகளை, அரசுப் பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 27.6 சதவீதம், தனியார் பள்ளி மாணவர்களில் 47.5 சதவீதம் பேரால் மட்டுமே செய்ய முடிகிறது. இதே நிலைதான் எல்லா பாடங்களிலும் உள்ளது.கற்றல் திறன் தொடர்பாக 3, 6, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) நடத்திய தேர்வில், தமிழக மாணவர்கள் சராசரியாக மொத்தம் 240 மதிப்பெண்களுக்கு 55.1 மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளனர். இதில் கேரள மாணவர்கள் 140.3 மதிப்பெண்களும், நாட்டிலேயே அதிகபட்சமாக பஞ்சாப் மாணவர்கள் 150.4 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இதற்கு முன்பு இருந்த அரசுகள் செயல்படுத்திய காலை - மதிய உணவுத் திட்டம், விலையில்லா கல்வி உபகரணங்கள், ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப் பைகள், நோட்டுகள் மற்றும் காலணிகள், மலைப் பகுதி மாணவர்களுக்கு கம்பளி உடை, மழை கோட்டுகள், விலையில்லா மிதிவண்டி, இலவச பேருந்துப் பயணம் போன்றவற்றின் மூலம் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன் இடைநிற்றலும் குறைந்துள்ளதை மறுக்க முடியாது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக, பள்ளிக் கல்வியைப் பொருத்தவரை தமிழகம் ஓரளவு முன்னணியில் உள்ளது.

முன்பெல்லாம் கணிதத்தில் மட்டுமே மாணவர்கள் முழு மதிப்பெண் எடுப்பார்கள். கடந்த மே 20}ஆம் தேதி வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் தமிழ் பாடத்தில் 34 பேர், அறிவியலில் 10,476 பேர், சமூக அறிவியலில் 3,336 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் ஆயிரக்கணக்கானோர் எடுத்துள்ளனர்.

கற்றல் திறனைப் பொருத்தவரை, 6 முதல் 9}ஆம் வகுப்பு வரை கடந்த 2025-ஆம் ஆண்டு மாநில அளவில் ஆய்வு நடத்தி 7.47 லட்சம் மாணவர்கள் பின்தங்கி உள்ளனர் என்பதை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்த தனிக் கவனம் செலுத்தப்பட்டது. இதுபோன்ற முயற்சி எல்லா வகுப்புகளுக்கும் இந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழகத்தில் 90.9 சதவீத ஆடவர் பள்ளிகளிலும், 94.5 சதவீத மகளிர் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி உள்ளது. பொது வெளியில் இருக்கும் கழிப்பறைகள் பெரும்பாலும் துர்நாற்றத்துடனும் முறையாகப் பராமரிக்கப்படாமலுமே உள்ளன.

இதுபோன்ற நிலை பள்ளி கழிப்பறைகளில் இருக்கக்கூடாது.சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 37 நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

தங்களது கற்பித்தல் திறன் அதிகரிக்க, மாணவர் சேர்க்கை, ஆவணப் பராமரிப்பு, மாணவர்களின் தரவுகளை "எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்தல், காலை மற்றும் மதிய உணவுத் திட்ட கண்காணிப்பு, விலையில்லா பொருள்கள் வழங்குதல், அதற்கான ஆவணங்களைப் பராமரித்தல் போன்ற கற்பித்தல் சாராத பல்வேறு பணிகளுக்குத் தனியாக நபர்களை நியமிக்க வேண்டும் என்பது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையாகும். இதையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்று நீதி ஆயோக் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள 3,671 ஓராசிரியர் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வியில் சிகரத்தை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பெரும் பணி புதிய அரசுக்கு காத்திருக்கிறது.

திருக்குறள்

அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்?

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?

திருக்குறள் (எண் 483) அதிகாரம்: காலம் அறிதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.