வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியம்: மதுரை மாவட்டத்துக்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை  மானியத்தில் வழங்கும் திட்டத்துக்கு, மதுரை மாவட்டத்துக்கு ரூ. 90.87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை  மானியத்தில் வழங்கும் திட்டத்துக்கு, மதுரை மாவட்டத்துக்கு ரூ. 90.87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
       வேளாண் பொறியியல் துறையின் வேளாண் பணிகளை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இதில், 8 குதிரைத் திறன் முதல் 70 குதிரைத் திறன் சக்திகொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் உள்ளிட்டவை வாங்கலாம்.
     சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.
     வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விரும்பும் குழுக்கள் அல்லது தொழில்முனைவோர் ரூ. 25 லட்சம் மதிப்புடைய வேளாண் இயந்திரங்களை வாங்கும்பட்சத்தில், அவர்களுக்கு 40 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்.
    பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்பாடு குறைவாக உள்ள கிராமங்களில், அந்தந்த கிராம அளவிலான குழுக்கள் ரூ.10 லட்சம் மதிப்புடைய பண்ணை இயந்திரங்களை வாங்கி வாடகை மையங்கள் நடத்தலாம்.  இத் திட்டங்களின்படி, தனிப்பட்ட இயந்திரங்கள் வாங்கிக் கொள்வதற்கு ரூ. 20.87 லட்சம், வாடகை மையங்கள் அமைக்க ரூ. 70 லட்சம் என, மதுரை மாவட்டத்துக்கு மொத்தம் ரூ. 90.87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தொழில்முனைவோர், விவசாயிகள் குழுவினர், மதுரை மற்றும் உசிலம்பட்டியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com