மதுரையின் 13 வது ஆண்டு புத்தகத் திருவிழா வரும் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமுக்கம் மைதானத்தில் தொடங்கி செப்டம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புத்தக அரங்குகளின் முகப்பில் தற்காலிக திருவள்ளுவர் சிலை அமைக்கப்படவுள்ளது. இந்த திருவிழாவில் 250 புத்தக அரங்குகள் இடம் பெறவுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான நூல்கள் இடம் பெறவுள்ளன.
புத்தகத் திருவிழா வேலை நாள்களில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 10 மணி முதல் இரவு வரையிலும் நடத்தப்படவுள்ளது.
மேலும், தினமும் மாலையில் சிறப்பு உரை, கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகியவையும் நடைபெறவுள்ளன.
போட்டிகள்: புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி தமுக்கத்தில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதையடுத்து செப்டம்பர் 4 ஆம் தேதி 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகளும், 5 ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டிகள் செப்டம்பர் 6 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. போட்டிகளை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செந்தூரான் நடத்துகிறார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரிக்கை: மதுரையில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்துவதற்கு முன்பு சுவர் விளம்பரங்கள், முக்கிய இடங்களில் பதாகைகள் வைக்கப்படுவது வழக்கம்.
ஆனால், நடப்பாண்டில் புத்தகத் திருவிழா குறித்த விளம்பரங்கள் இதுவரை செய்யப்படவில்லை. பள்ளி, கல்லூரிகளில் சிறிய அளவிலான தகவல் பலகைகளில் புத்தக திருவிழா குறித்த விவரங்களை வைத்துள்ளனர்.
எனவே புத்தகத்திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என புத்தக ஆர்வலர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









