கோயிலை வணிக நோக்கில் பார்க்கக் கூடாது: சுவாமி கமலாத்மானந்தர்
கோயிலை வணிக நோக்கில் பார்க்கக் கூடாது என்று மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் கூறினார்.


கோயிலை வணிக நோக்கில் பார்க்கக் கூடாது என்று மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் கூறினார்.
மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் மதுரை பேச்சியம்மன் படித்துறை சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமைவகித்து பேசியதாவது:
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் ஆபத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது. கோயில் நிர்வாகம் வணிக நோக்கத்தில் செயல்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. கோயிலைத் தூய்மையாக பாதுகாப்பதிலும், பக்தர்கள் நலனில் மட்டுமே கோயில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, கோயிலை வைத்து வருமானத்தை பெருக்குவதில் ஆர்வம் காட்டக் கூடாது. கோயிலுக்குள் இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து பாஜக மாவட்டத் தலைவர் சசிராமன் பேசுகையில், கொள்ளையர்களின் கூடாரமாக கோயில்கள் மாறி வருகின்றன. பாதுகாப்பு காரணங்களைக் கூறி பக்தர்கள் தீப்பெட்டிகள், கற்பூரம் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயிலுக்குள் கடைகள் வைத்திருப்போர் இவை அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் இதை எப்படி அனுமதிக்கின்றனர் எனத் தெரியவில்லை.
கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் விதிமீறல்கள் உள்ளன. தற்போது வருமானம் ஈட்டுவதில் நான்காவது இடத்தில் இருக்கும் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை முதலிடத்திற்கு கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு கோயில் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. தரிசனத்துக்கு சிறப்பு கட்டணங்கள், வாகன நிறுத்தகத்திற்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
தீ விபத்து தொடர்பாக கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளில் முதல் 15 நிமிடக் காட்சியில் எட்டு பேரின் உருவங்கள் தெரிவதாக கூறப்படுகிறது. இதை போலீஸார் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்பவத்திற்கு பொறுப்பேற்று கோயில் தக்காரும், இணை ஆணையரும் பதவி விலக வேண்டும். கோயில்களை இந்துசமய அறநிலையத்துறை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றார்.
பாஜகவின் மாநிலச் செயலர் பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் பேசுகையில்,
மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விபரங்களில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர் பெரும்பாலும் தமிழகத்திற்கு வருகை புரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், தமிழகத்தில் உள்ள கோயில்களை பார்வையிடவே வருகின்றனர். ஆனால், இத்தகைய பெருமையுடைய கோயில்கள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி இருப்பது வேதனையளிக்கிறது. பக்கத்து மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் கோயில்கள் அனைத்து ஆகம விதிகள்படி செயல்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதற்கு நேர் எதிராகவே இருக்கின்றனஎன்றார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு குழு, பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொண்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...