குற்றவாளிகளை கண்டறிய புதிய செயலி: டிஐஜி பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்

மதுரை ஊரகக்காவல்துறையில் குற்றவாளிகளை கண்டறியும் "காப்ஸ் ஐ' (காவலர் கண்) புதிய செல்லிடப்பேசி செயலியை மதுரை சரக டிஐஜி பிரதீப்குமார் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

மதுரை ஊரகக்காவல்துறையில் குற்றவாளிகளை கண்டறியும் "காப்ஸ் ஐ' (காவலர் கண்) புதிய செல்லிடப்பேசி செயலியை மதுரை சரக டிஐஜி பிரதீப்குமார் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
 மதுரையில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலியை அறிமுகம் செய்து வைத்த பின்னர் அவர் கூறியது:
 காவல்துறையினர் ரோந்துப்பணி மற்றும் வாகனச்சோதனையில் ஈடுபடும்போது, சந்தேகத்துக்குரிய நபர்கள் பிடிபட்டால் அவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று படம் எடுப்பது, கைரேகை பதிவு செய்து ஏற்கெனவே உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதற்கு நீண்ட நேரம் ஆகிறது. தனியாக காவலர்களும் தேவைப்படுகின்றனர். இதனால் கால விரயத்தை தவிர்க்க குற்றவாளிகளை கண்டறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவலர்களின் கண்காணிப்பு என்று பொருள்படும் விதமாக காப்ஸ் ஐ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
 இந்த செயலியை காவலர்கள் தங்களது ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ரோந்தின் போது அல்லது வாகனச்சோதனையின்போது சந்தேகத்துக்குரிய நபர்கள் இருந்தால் அவர்களை செல்லிடப்பேசி மூலம் படம்பிடித்து காப்ஸ் ஐ செயலியில் பதிவிட்டால் அவர் குற்றவாளியா இல்லையா என்பதை உடனடியாக இந்த செயலி மூலம் அறியலாம்.
 இதற்காக முதல்கட்டமாக நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் குற்றப்பதிவேட்டில் இடம்பெற்றுள்ள 2 ஆயிரம் நபர்களின் படங்கள் காப்ஸ் ஐ செயலியோடு இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றப்பதிவேடுகளில் உள்ள அனைவரின் படங்கள் மற்றும் விவரங்களும் இணைக்கப்படும். இதன்மூலம் குற்றப்பதிவேட்டில் உள்ள நபர்களை கண்காணிக்கும் பணி எளிதாகும்.
 கண்காணிப்பிலேயே அவர்கள் வைக்கப்படுவதால் குற்றங்களும் குறையும். மேலும் முக்கிய காவல் சோதனைச்சாவடிகள், சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதனுடன் இந்த செயலி இணைக்கப்பட உள்ளது என்றார். ஊரகக்காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com