மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் இரண்டு நாள்களில் ஆண் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இதுவரை பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பல்வேறு வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த முருகனின் குழந்தை சக்திவேல் (1) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு பரிசோதனையில் குழந்தை சக்திவேலுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை சக்திவேல் ஞாயிற்றுக்கிழமை இறந்தது.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலைச் சேர்ந்த அர்ச்சகர் ராமசாமி மனைவி விஜயலட்சுமி(45). இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்ததால் அப்பகுதியில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனளிக்காததால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு விஜயலட்சுமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறந்தார்.
சிவகங்கை மாவட்டம் அரிக்குடியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் மனைவி சித்ரா (54). இவர் காய்ச்சல் பாதிப்பால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனையில் சித்ராவுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சனிக்கிழமை இரவு சித்ரா இறந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 122 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் இதில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் மூவர் குழந்தைகள் என்றும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனியார் மருத்துவமனையில் கொத்தனார் சாவு: மதுரை மாவட்டம் கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (49). கொத்தனார் வேலை பார்த்து வந்த பாண்டியராஜன் கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாண்டியராஜனுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவர் இறந்தார்.
திருத்தங்கலைச் சேர்ந்த பெண் சாவு: திருத்தங்கல் பேட்டைத் தெருவைச் சேர்ந்த மனோகரன் மனைவி முத்துசெல்வி (32). இவர், சில நாள்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருத்தங்கல் மற்றும் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிவகாசி தனியார் மருத்துவமனையில் முத்துசெல்விக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சனிக்கிழமை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துசெல்வி, அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








