பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவே தற்காப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது என்று மாநகரக்காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மதுரை மாநகரக் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பையொட்டி மூன்று நாள்களாக நடைபெற்று வந்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. தற்காப்புக்கலை பயிற்சியாளர் ஸ்ரீராம் பெண்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்.
இதனையடுத்து பயிற்சி முகாமில் பங்கேற்ற பெண் காவலர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் சான்றிதழ்கள் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த முகாமில் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது, பெண்களின் உரிமைகள், சட்டப் பாதுகாப்புகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக காவல்துறையை அணுகுவது ஆகியவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாநகரக் காவல்நிலையங்களில் வரும் 100 புகார்களில் 50 புகார்கள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்த புகார்களாக உள்ளன. எனவே பயிற்சி முகாமில் பாலின சமத்துவம், நிர்பயா சட்டம் ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயிற்சி முகாமில் 17 கல்லூரிகள், 40 பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆயுதப்படை பெண் காவலர்கள், வார்டு குழுக்களின் பொறுப்பாளர்களாக உள்ள சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 15 வகையான தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த முகாமில் பயிற்சி பெற்றுள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
சார்பு ஆய்வாளர்கள் அனைவரும் தங்கள் வார்டுகளில் உள்ள பள்ளிகள், குடிசைப்பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கான விரிவான பயிற்சி முகாம் சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கி, பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினமான நவம்பர் 25-ஆம் தேதி பயிற்சி முடிவடைகிறது.
மதுரை மாநகரில் 45 நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமின் மூலம் சுமார் 50-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், பொதுமக்கள் பயனடைவர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









