
தேவையற்ற காரணங்களைக் கூறி சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை வசந்தநகரைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பாலகிருஷ்ணன் (86). இவர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றதால் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் 1943-1944 வரை அடைக்கப்பட்டார்.
இதனால் தமிழக அரசின் ஓய்வூதியத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பெற்றுள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான மத்திய அரசின் ஓய்வூதியம் கேட்டு 2012 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பம் கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய உள்துறை செயலரால் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பாலகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த தனி நீதிபதி, பாலகிருஷ்ணனுக்கு ஓய்வூதியம் கேட்ட மனுவை நிராகரித்து மத்திய உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க 4 வாரத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும். அடுத்த 4 வாரத்தில் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று 2017 ஏப்ரலில் உத்தரவிட்டார்.
இதையடுத்து மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய அரசுக்கு கடந்த மார்ச் மாதம் தமிழக பொதுத்துறை செயலாளர் பரிந்துரை செய்தார். ஆனால் பாலகிருஷ்ணனுக்கு தியாகி ஓய்வூதியம் வழங்க மீண்டும் மறுத்து மத்திய உள்துறை செயலர் 2018 ஜூனில் உத்தரவிட்டார். இதுதொடர்பாக தியாகி பாலகிருஷ்ணன், மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் ஏற்கனவே தமிழக அரசின் தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெற்று வருகிறார். இதை அடிப்படையாக கொண்டு அவருக்கு மத்திய அரசும் ஓய்வூதியத்தை வழங்கலாம். சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து நாட்டுக்கு விடுதலை பெற்று தந்தவர்களின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தேவையற்ற காரணங்களை கூறி ஓய்வூதியம் வழங்க மறுப்பது துரதிர்ஷ்டவசமானது.
எனவே மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரருக்கு 2.4.2012 அன்று முதல் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2012 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவைத்தொகையை 7.5 சதவீத வட்டியுடன் 2 வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






