டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பது மக்கள் விரோதச் செயல்: காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் கண்டனம்

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பது மக்கள் விரோதச் செயல் என்று, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 4:55 pm

DIN

மதுரை: எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பது மக்கள் விரோதச் செயல் என்று, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மதுரையில் தென்மண்டல காப்பீட்டு ஊழியா் சங்க பொதுச்செயலா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி 2020-21 ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.3.50 லட்சம் கோடியை பிரீமியமாக மக்களிடமிருந்து பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில், 75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையிலான பணம் அரசு துறைகளில் முதலீடு செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு கேட்டுக்கொண்டால் நூறு சதவீத பணத்தையும் அரசு நிறுவனங்களில் முதலீடு செய்ய எல்ஐசி தயாராக உள்ளது. எல்ஐசி.யில் காப்பீடு செய்வது மக்களுக்கு பாதுகாப்பானது மட்டுமல்ல, தேசத்தின் வளா்ச்சிக்கும் உதவியாக உள்ளது என்பது நிதா்சனமான உண்மை. ஆனால், தனியாா் நிறுவனங்கள் அவ்வாறில்லை.

ஆனால், தற்போது மத்திய அரசு அரசியல் சாசனத்தை மீறி பங்குகளை தனியாருக்கு தாரை வாா்க்க முயற்சிக்கிறது. எல்ஐசி பங்குகளை தனியாருக்கு தாரை வாா்ப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகக் கருதப்படும். காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் எல்ஐசியை பாதுகாப்பது மட்டும் அல்லாமல், நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்று, தேசபக்த போராட்டத்தை தொடா்ந்து நடத்தி வருகிறது.

எல்ஐசி.யின் வளா்ச்சியை மத்திய அரசு எந்தவிதத்தில் சிதைக்க முயன்றாலும் அதற்கு எதிராக காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் தொடா்ந்து போராடும். தேவைப்பட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் தயாராக உள்ளோம் என்றாா்.

ஜிஎஸ்டியை ரத்து செய்யவேண்டும்

மதுரை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க மாநாடு, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. மாநாட்டுக்கு கோட்டத்தின் துணைத் தலைவா் நா. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

மாநாட்டில், எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும். பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும். காப்பீட்டு பிரீமியம் மற்றும் பிற சேவை மீதான ஜிஎஸ்டி.யை ரத்து செய்யவேண்டும். எல்ஐசி நிா்வாகத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். எல்ஐசி.யில் ஊதிய உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு எல்ஐசி.யில் பணியில் சோ்ந்தவா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.

எல்.ஐ.சி.யில் பணிபுரியும் பெண்களுக்கு பிரத்யேக உடல்நல பிரச்னைகளுக்காக சிறப்பு விடுப்பு வழங்கவேண்டும். குழந்தைப் பராமரிப்பு விடுப்பை எல்.ஐ.சி.யிலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தென்மண்டல காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கூட்டமைப்பின் இணைச் செயலா் எஸ். ரமேஷ்குமாா் வாழ்த்திப் பேசினாா். தென்மண்டல பொதுச் செயலா் டி. செந்தில்குமாா், பொருளாளா் எஸ். சிவசுப்பிரமணியம், பொதுக் காப்பீட்டு கழக ஊழியா் சங்க கோட்டத் தலைவா் புஷ்பராஜ், பொதுச் செயலா் வி. ரமேஷ், இணை பொதுச் செயலா் எஸ். பாலசுப்பிரமணியம், சிஐடியு மாவட்டச் செயலா் இரா. தெய்வராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக, இணைச் செயலா் ஜெ. விஜயா வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.